widget

தமிழ்வின் செய்திகள்

domenica 9 febbraio 2014

தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு வருடங்களாகி விட்டன. யுத்தம் முடிவுற்ற போதிலும் அது ஏற்படுத்திய துயரம் ஓயவில்லை. பல உயிர்கள் காணாமல் போய்விட்டன.  அநேக உயிர்கள் மரணித்து விட்டன. உடமைகள் அழிந்து விட்டன.   உண்ணவும் உடுக்கவும் நாதியற்று பல குடும்பங்கள் நடைப் பிணமாக வாழ்கின்றன . இவைகளுக்கெல்லாம் முற்று  முழுதான முடிவு காணப்பட வேண்டும் என்பதே  பொது அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் என யுத்தத்தினால்  இறந்த காணாமல் போன  உறவினர்களின் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர்  தெரிவித்தார். 

கடந்த  கால யுத்தத்தினால் தமிழ் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இக் கருத்தை யாரும் மறுப்பதற்கில்லை. அதேபோன்று எமது நாட்டின் அனைத்து சமூகங்களுமே பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுவும் எவராலும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய  உண்மை.   நடந்தவைகள் பற்றி காலம் காலமாகப் பேசிக் கொண்டிருப்பதை விடுத்து  அவற்றிற்கான நிவாரணத்தைத் தேடுவதும்  எதிர்காலத்தில் அவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாதிருப்பதற்கான ஸ்திரமான வழிவகைகளை வகுத்து அவைகளை நடைமுறைப்படுத்துவதும் இந்நாட்டின்  குடிம க்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள கடப்பாடு ஆகும்.  காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களின் இருப்பிடத்தை அறிய வேண்டும். அதனை அவர்களது உறவினர்களுக்குத் தெரியப்படுத்தி காணாமல்போனவர்களோடு உறவினர்களைத் தொடர்புபடுத்த வேண்டும்.  காணாமல் போனவர், தடுப்புக் காவலிலோ அல்லது சிறையிலோ இருக்கலாம். அது பற்றிய தரவுகளை அரச  நிர்வாகத்தின் உதவியோடு கண்டுபிடிப்பதும் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதும்  எமது அமைப்பின் நோக்கங்களில் பிரதானமானது.  யுத்தத்தில் இறந்தவர்களின் மரணச் சான்றிதழ்கள் கடந்த  காலத்தில் பல இடங்களில் பெரும்பாலும் வழங்கப்படவில்லை.  இது துரிதப்படுத்தப்படல் வேண்டும் . அதற்கான  தடைகள் ஏதும் இருப்பின் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எமக்கு சாதகமாக அவைகளைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்  . நாம்  ஒரு தனிமனிதரல்ல, ஒரு சிறிய  குழுவல்ல,  தேசிய  மட்டத்திலான ஒரு சுயாதீன அமைப்பு. இதனை நாங்கள் அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.  எனவே அரசு எமது சரியானதும் சட்ட ரீதியானதுமான வேண்டுகோள்களைப் புறக்கணிக்கவோ தள்ளி வைக்கவோ முடியாது.   இன்னும் பிரதானமானது இறந்தவர்கள் பற்றியது. 

இறந்தவர்களுடைய  இறப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம்.  இறப்பொன்று யுத்தம் காரணமாக ஏற்பட்டதாயிருந்தால்  அதற்கான நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். ஒரு  நபர் இறந்து விட்டார் என்றால் அந்த நபரால் தாபரிக்கப்பட்ட குடும்பம்  பாதிக்கப்படும். இது நியதி. ஆகவே , அக் குடும்பம்   அவஸ்தையின்றி வாழ நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.இதேபோலவே காணாமல் போனவர்களுடைய விடயத்திலும் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.  அரச நிர்வாகம் தொழில் வாய்ப்புகள், உதவிகள் வழங்கும் போது இவ்வாறான குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய எமது அமைப்பு முனைந்து நிற்கும் . உதாரணமாக ஆசிரிய நியமனம் அரசினால் வழங்கப்படுவதாக வைத்துக் கொண்டால் பொருத்தமும் தகுதியானதுமான ஒருவர் இவ்வாறான பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்தால் அவருக்கு முன்னுரிமை வழங்குமாறு எமது அமைப்பு அரசை நிர்ப்பந்திக்கும். அத்துடன்   பாதிப்புக்குள்ளான குடும்பமொன்றிற்கு வருமானத்தைத்  தேடும் வழிவகைகளை அல்லது  கிடைத்து வருகின்ற வருமானத்தை அதிகரிக்கும் வழிவகைகளை எமது அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கும்.    இவைகளையெல்லாம் செவ்வனே நிறைவேற்றுவதற்கு பண பலம் அவசியமானது. அரசின்  துணை நிரந்தரமாகத் தேவைப்படும் .

அரசு எமக்கு உதவுவதற்கு உறுதி  அளித்துள்ளது. பல வெளிநாடுகள் எமக்கு கை கொடுக்கும் என திடமாக நம்புகிறோம். இவைகளை எல்லாம் சட்டென்று செய்து விட முடியாது. முப்பது வருட கால யுத்தத்தின் வடுக்களை ஒரு வாரத்திலோ ஒரு  மாதத்திலோ நீக்கி விட முடியாது. ஒரு கால அவகாசம் தேவை. கால அவகாசம் என்பதை காலம் கடத்துவதாக எண்ணி விடக் கூடாது.   இவைகளைச் சரியாக செய்வதற்கா க முதலில் மாவட்ட ரீதியாக விபரங்களை திரட்டி வருகிறோம். இதற்காக மாவட்ட ரீதியில் செயலணிக் குழுக்களை அமைத்து பணிப்பாளர்களை நியமித்து செயற்பாடுகளில் இறங்கியுள்ளோம். இற்றைவரைக்கும் கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கான ஆரம்ப நிர்வாக செயற்பாடுகள் முடிவுற்று தரவு திரட்டும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.  

அதேபோன்று மரண அத்தாட்சிப் பத்திரம் பெற்றுக் கொடுக்கும் வேலைகளிலும் கரிசனை காட்டப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் இதற்கு  முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. சில  மாவட்டங்களில் வேறுபட்ட சமூகங்கள் வாழ்கின்றன.   அவர்கள் தரவுகளை வழங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றார்கள். உதாரணமாக    மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவின  மக்கள் வாழ்கின்றார்கள். மாவட்டப் பணிப்பாளராக தமிழர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இங்கு தகவல்களை வழங்குவதற்கு  தமிழரல்லாத இனத்தவர்கள் தயக்கம் காட்டுவது தவறு. கடமையைச் செய்யும் போது, சேவையை எதிர்பார்க்கும் போது இனமோ, மொழியோ  தடையாக இருக்கும் என கற்பனை செய்வது புத்திசாலித்தனமல்ல. மேலும் இவ்வாறான சேவைகளை வழங்குதவதற்கு அம்பாறை, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் காரியாலயங்களை திறப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன . இம் மாவட்டங்களுக்கான பணிப்பாளர்கள் ஏற்கனவே  நியமிக்கப்பட்டு விட்டார்கள்  விபரங்கள் சேகரிக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டு விட்டது.  ஆயினும் காரியாலயம் திறக்கப்படாமலிருக்கும் அம்பாறை, திருமலை  ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைபெறும் வேலைகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பு மட்டு. மாவட்டப் பொறுப்பாளர்   மகேஸ்வரனுக்கு பணிப்புரை மூலம் வழங்கப்பட்டுள்ளது.   

மிக முக்கியமான விடயம் தகவல்களை பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறவுகள் கையளிப்பது. உறவுகள் கையளிக்கின்ற விடயங்களில் தான் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தங்கியிருக்கிறது. எனவே தரவுகள் பிரயோசனமானதாக இருக்க வேணடும். படிவத்தில்  கேட்கப்பட்ட தரவுகளை விட மேலதிக விபரங்கள் இருக்குமாயின் அவைகளை விபரமாக எழுதி குறித்த படிவத்தோடு இணைத்து ஒப்படைக்கலாம். காணாமல் போனவர் விடயத்தில் அவரது  புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தால் எங்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும்.இந்த அறிக்கையூடாக பொது மக்களிடம்  ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். முதலாவது உங்கள் ஒத்துழைப்பு அவசியம். நீங்கள் காட்டும் ஆர்வமும் துரிதமும் எங்களுக்கு உந்து சக்தியாக இருக்கும். இரண்டாவதாக நாம் அனைவருமே இலங்கையர்கள். இந்த நாடு எமக்கு சொந்த நாடு. வடக்கு, தெற்கு , கிழக்கு , மேற்கு என்ற பாகுபாடின்றி எல்லோரும் ஒன்றிணைந்து  எமக்கு ஏற்பட்டுள்ள  துன்பங்களைக் களையப் பாடுபடுவோம். ஒன்றுமையே எமது பலம்

Wednesday, January 1, 2014



கொழும்பு மாநகரம் தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. அதாவது மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கதிகமானோர் தமிழ் பேசும் மக்கள் என்பதைப் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன. கொழும்பு மாநகரம் கொழும்பு வடக்கு,  கொழும்பு மத்தி,  கொழும்பு மேற்கு,  கொழும்பு கிழக்கு,  பொரளை ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாகவும் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாகவுமுள்ளது.  கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு மத்தி. ஆகிய தேர்தல் தொகுதிகள் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவிலும் பொரளை,  கொழும்பு கிழக்கு,  கொழும்பு மேற்கு ஆகிய தொகுதிகள் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவிலும் அடங்குகின்றன. விகிதாசாரப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத் தெரிவு முறைக்கு முன் கொழும்பு மத்தி மூன்று அங்கத்தவர் தொகுதியாக இருந்ததுடன்,  அன்று கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட ஐந்து தேர்தல் தொகுதிகளிலிருந்தும் ஏழு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர். கொழும்பு மாநகர சபைக்கு மக்களால் விகிதாசார வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஐம்பத்தி மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.  தமிழ் பேசும் மக்களின்  குறிப்பாக தமிழர்கள்,  தமது உதாசீனப் போக்கால் தமக்குரிய பிரதிநிதித்துவங்களை கொழும்பு மாநகர சபையில் இழந்தவர்களாகவே உள்ளமை காலம் காலமாகக் கண்டுகொள்ளப்படாத,  புரிந்துகொள்ளப்படாத ஒன்றாகவேயுள்ளது.  கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளினதும் நிர்வாக மொழிகளாகத் தமிழ் மொழியும் சிங்கள மொழியும் உள்ளன. பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட கொழும்பு மாநகர சபையினதும் நிர்வாக மொழிகளாக குறித்த இரண்டு மொழிகளுக்கும்  சம உரிமையுள்ளது.  

2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதிய 1171/15 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அடங்கும் திம்பிரிகஸ்யாய மற்றும் கொழும்பு ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளில் நிர்வாக மொழியாகத் தமிழ் மொழியும் சட்ட பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளில் மட்டுமல்லாது கொழும்பு மாநகர சபையின் செயற்பாடுகளும் தமிழ் மொழியிலும் இடம்பெற வேண்டும்.  ஆனால் நடைமுறையில் தமிழ் மொழி,  குறித்த மூன்று நிர்வாக அமைப்புகளிலும் புறக்கணிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது. கொழும்பு மாநகர எல்லைக்குள் தமிழ் மொழிக்குச் சட்டரீதியான நிர்வாக மொழியுரிமை வழங்கப்பட்டு பதின்மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் அது நடைமுறைக்கிடப் படவில்லையென்பதையிட்டு நாட்டின் அரசியலமைப்பு விதிகள்,  நோக்கங்கள் மீறப்படுகின்றன. இழிவுபடுத்தப்படுகின்றன என்றே எண்ணத் தோன்றுகின்றது. அரசியலமைப்பு அவமதிக்கப்படுகின்றது என்றாலும் தவறில்லை.  நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் அச்சட்டத்திற்கு 1987 ஆம் ஆண்டிலும், 1988 ஆம் ஆண்டிலும் கொண்டுவரப்பட்ட 13 மற்றும் 16 ஆம் திருத்தங்களின் படியும் தமிழ் மொழிக்கு நாட்டில் வழங்கப்பட்டுள்ள செயற்பாட்டுரிமை தொடர்பில் தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலே, நடைமுறையிலே அரச கரும மொழிகளைச் செயற்படுவத்துவது தொடர்பில்  பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சால் 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிர்வாகச் சுற்றறிக்கை இலக்கம் 18/2009 இல் தெளிவான  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன்,  ஒவ்வொரு அரச நிறுவனம் மற்றும் மாகாண,  உள்ளூராட்சி சபைகளினதும் மொழி விதிகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்புடைய அலுவலர் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கைக்கு மேலதிகமாக 2009 நவம்பர் மாதம் 25 ஆம் திகதிய 1620/27 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி மூலமும் இது விடயம் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுநிருபமும் வர்த்தமானியும் வெளியிடப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவற்றில் கூறப்பட்டுள்ள எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்பதே யதார்த்தமாகவுள்ளது.  குறித்த சுற்றுநிருபம் மற்றும் வர்த்தமானிகள் மூலம் அரச கருமமொழிகளை நடைமுறைப்படுத்தும் பிரதம அதிகாரிகளாக அமைச்சின் செயலாளர்,  திணைக்களத் தலைவர்,  மாகாண சபையின் பிரதம செயலாளர்,  மாகாண சபை அமைச்சின் செயலாளர், மாகாண திணைக்களத் தலைவர்கள்,  மாநகர சபை ஆணையாளர்கள்,  நகர சபை செயலாளர்கள்,  பிரதேச சபை செயலாளர்கள் ஆகியோர்  பதவி வழியால் பெயரிடப்பட்டுள்ளனர். அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர்.  அவ்வாறே அரசகரும மொழிகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளாக பின்வருவோர் குறிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  அமைச்சுகளில் மொழிக் கொள்கையைச் செயற்படுத்தும் பொறுப்பு மேலதிக செயலாளர் அல்லது சிரேஷ்ட உதவிச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போன்று திணைக்களத்தின் மேலதிகத் தலைவர் அல்லது பிரதித் தலைவர்,  திணைக்களத்திற்கும் நிர்வாகத்திற்குப் பொறுப்பான  மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர் ,  மாகாண சபைக்கும் , மாகாணசபையின் பிரதி பிரதம செயலாளர் ,  மாகாண சபைக்கும் மாகாண சபை அமைச்சின் பிரதிச் செயலாளர் மாகாண சபை அமைச்சுக்கும் மாகாண திணைக்களங்களுக்கு அவற்றின் மேலதிக தலைவர் அல்லது பிரதி மேலதிக தலைவர் ஆகியோருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

மாநகர சபைகளைப் பொறுத்தவரை பிரதிமாநகர ஆணையாளரும் நகர சபைகளுக்கும் பிரதேச சபைகளுக்கும் அவற்றின் நிர்வாக அதிகாரிகளும் மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்புடையவர்களாவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.  ஒரு அரச அலுவலருக்கு அவர் செயற்பட வேண்டிய முறைமை மற்றும் பொறுப்புகள் அடங்கிய பணிப்பட்டியல் வழங்கப்படுவது வழக்கிலுள்ள நடைமுறை. இந்நடைமுறை அதாவது பொறுப்புகளில் மொழி அமுலாக்கல் பற்றிய பொறுப்பு அரச அலுவலர்களின் அதாவது அமைச்சு திணைக்களங்கள் மாகாண,  மாநகர,  நகர,  பிரதேச சபைகளில் பொறுப்பிக்க வேண்டியவர்களது பணிப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பது ஆய்வுக்குரியது. பணிப்பட்டியலில்  பொறுப்பு அதாவது தனக்குரிய நிறுவனத்தில் அரச கரும மொழிக் கொள்கைøயைச் செயற்படுத்தும் பொறுப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தும், அதனை உரியபடி செயற்படுத்தாது அலட்சியப்படுத்தப்படுமாயின் அது பற்றிய  குற்றம் யாரைச் சார்ந்தது என்பதும் வெளிப்படுத்தப்பட வேண்டும். உரிய, செயற்படுத்த வேண்டிய பொறுப்பை ஆற்றாத விடுவது பணி உதாசீனமாகும். சுற்றுநிருபங்களும் வர்த்தமானிகளும் மொழி அமுலாக்கல் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்தாலும்  அதை உரியபடி நடைமுறைப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை, படுவதுமில்லை என்பதே உண்மை. கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் அரச கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்தும் பிரதம அதிகாரியாகவும் பிரதி மாநகர ஆணையாளர் மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்புடைய அதிகாரியாகவும் உள்ளமை அப்பதவிகளை வகிப்போர் அறிந்திருக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. கொழும்பு மாநகர சபையைத் தமிழ் மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தும் முன்மாதிரி நிறுவனமாகச் செயற்படுத்துவது தொடர்பில் அரச கரும மொழிகள் திணைக்களம் முன்முயற்சி மேற்கொண்டு செயற்படுவதாக இற்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டது. 

அது வெற்றுப் பேச்சு என்பது நடைமுறையில் வெளிப்பட்டது.  கொழும்பு மாநகரின் வரியிறுப்பாளர்களில் அதிகமானவர்கள் தமிழ் பேசும் தமிழரும் முஸ்லிம்களும் ஆவர். இருந்த போதிலும் கொழும்பு மாநகர சபையின் நிர்வாகச் செயற்பாடுகளில் தமிழ் மொழி முற்றாகவே புறக்கணிக்கப்பட்டுள்ளமை மட்டுமன்றி தமிழரது நலன்களும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.  கொழும்பு மாநகரசபைத் தலைமை அலுவலகத்திலுள்ள கரும பீடங்களே தமிழ் மொழிப் புறக்கணிப்புக்குத் தெளிவான சான்றுகளாகவுள்ளன. சகல கருமபீடங்களிலும் உரிய அறிவித்தல்கள் சகலதும் சிங்கள மொழியில் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல மாநகர சபையின் பிராந்திய அலுவலகங்களது நிலையும் அதுவாகவேயுள்ளது. வரியிறுப்பாளருக்கு அனுப்பப்படும் கடிதங்களும் சிங்களத்திலேயே அனுப்பப்படுகின்றன. அவ்வாறு அனுப்பப்படும் கடிதங்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பதை அறிந்து கொள்ளக் கூட முடியாதபடி கடிதத் தலைப்புகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பயன்பாட்டிலுள்ள  கடிதத் தலைப்புகளிலும் மாநகர அலுவலகங்களிலுள்ள கருமபீட அறிவித்தல்களிலுமாவது தமிழ் மொழி இடம்பெறச் செய்ய வேண்டியது உடனடித் தேவையாகும். கொழும்பு மாநகர சபையில் உறுப்புரிமை வகிக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் அவதானம் இவ்விடயத்தில் ஈர்க்கப்பட வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும். கொழும்பு மாநகர சபையால் வழங்கப்படும் சேவைகளில் ஒன்றான மயான சேவை மட்டும் தேவையின் போது தவறாமல் கிடைக்கின்றது. ஆம், கொழும்பு மாநகர சபையால் நிர்வகிக்கப்படும் நான்கு மயானங்கள் மட்டும் எந்த வேறுபாடுமின்றி மரணித்தவர்களை வரவேற்று அணைத்துக் கொள்ளும் சமத்துவம் பேணுபவையாகவுள்ளன.  

ஆனால் கொழும்பு மாநகர சபையால் நடத்தப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் கற்பித்தல் இடம்பெறுவதில்லை. இதனால் தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற தமிழ்,  முஸ்லிம் பிள்ளைகள் தொழில் பயிற்சி பெற வழியிழந்துள்ளனர். "மொண்டிசோரி' எனப்படும் பாலர் பாடசாலைகள் பதினாறு கொழும்பு மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றபோதும், அதில் ஒரு பாடசாலையிலாவது தமிழ் மொழி மூலம் கற்பித்தல் இடம்பெறுவதில்லை. இது தொடர்பான அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம் சார்பாக கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸ்ஸம்மிலிடம் நேரில் எடுத்துரைத்த போது குறைபாட்டை அவரும் ஏற்று கொண்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் தமிழ் மொழி மூலப் பாலர் பாடசாலைகளுக்கான வழிமுறை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இலங்கையின் பிரதான நூலகமாக கொள்ளப்படுவது கொழும்பு பொதுநூலகமாகும். பயங்கரவாதிகளால் யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்டதன் பின் கொழும்பு பொதுநூலகம் முதன்மை பெற்றது. இருந்த போதிலும் ஆளணிப் பற்றாக்குறையுடன் இயங்கும் அதில் விரல் விட்டெண்ணக்கூடிய தமிழர்களே பணிபுரிகின்றனர். கொழும்பில் பல காலமாக இருந்த தமிழ் பெயர்கள் மறைக்கப்படுகின்றன. கைவிடப்படுகின்றன. முகத்துவாரம் என்பது இன்று "மோதர'  ஆகியுள்ளது. அதபோல் பாலத்துறை "தொட்டலங்க' வாகவும், கொட்டாஞ்சேனை "கொட்டஹேன' வாகவும், செட்டித்தோட்டம் "ஹெட்டியாவத்தை'  யாகவும் முத்தையா பார்க் "சீமாமாலய'வாகவும் ஆகிவிட்டன. கலாயோகி ஆனந்த குமார சுவாமியின் பெயரிலிருந்த வீதியின் அளவு குறுக்கப்பட்டுள்ளது. சரவணமுத்து மைதானம் "சாரா'  மைதானம் என்றாகிவிட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள்  இந்துக்கள் கொழும்பு மாவட்டத்தில் பெருமையுடன் வாழ்ந்தமைக்கான  ஆதாரங்கள் நிறையவேயுள்ளன. இரத்மலானை திருநந்தீஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை தொடர்பில் அன்றைய உதவி தொல்பொருள் ஆணையாளரும் இன்றைய தொல்பொருள் ஆணையாளர் நாயகமுமான கலாநிதி செனரத் திசாநாயக்க வழங்கியுள்ள சான்றிதழ் அதைத் தெளிவுறுத்துகின்றது.  கொழும்பு மாநகர குடியிருப்பாளரின் வரிப்பணத்தை வருமானமாகப் பெறும் மாநகர சபை, வரியிறுப்பாளரின் அடிப்படை உரிமைகளையும் கௌவரத்தையும்  பேணிக்காக்க வேண்டிய கடப்பாடு கொண்டுள்ளது. கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகங்களிலும் தமிழ் மொழிப் புறக்கணிப்பு இடம்பெற்று வருகின்றது. தமிழ் மொழிப் புறக்கணிப்பு என்பது தமிழர்களைப் புறக்கணிப்பதாகவே அமைகின்றது.ஓய்வூதியம், சமுர்த்தி,  பிறப்பு  இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ் உட்பட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மேற்படி இருபிரதேசச் செயலகங்களுக்குச் செல்லும் சிங்கள மொழி தெரியாத தமிழரோ முஸ்லிமோ தம்முடன் சமகால மொழி பெயர்ப்பாளர் ஒருவரையும் அழைத்துச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது. தமிழில் கூறுவதை சிங்களத்திலும் சிங்களத்தில் கிடைக்கும் பதிலை தமிழில் மொழி பெயர்க்கவும் ஆள் உதவி தேவைப்படுகின்றது.

அதேபோல் தமிழ் மொழியில் ஒரு கடிதத்தைக் கொண்டு சென்றால் அதற்குச் சிங்கள மொழி பெயர்ப்பு கொண்டு வரும்படி கூறப்படுகின்றது. தமிழ் மொழிக்கு நிர்வாக உரிமையுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட கடிதம் செல்லுபடியற்றதாகக் கணிக்கப்படுகின்றது. அதாவது தமிழ் மொழியில் உரையாடி தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவோ தமிழ் மொழியில் தனது கோரிக்கையை எழுத்து மூலம் சமர்ப்பித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளவோ சட்டப்படி உரிமையிருந்தும் புறக்கணிக்கப்படும் நிலையில் தமிழ் மக்கள் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளனர் என்பது பகிரங்கப்படுகிறது. அதற்கு தானும் சளைத்தல்ல என்பது போல் கொழும்பு மாநகர சபையின் செயற்பாடுகளுமுள்ளன.  தேசிய ரீதியில் இன சமத்துவத்தைப் பேணவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவுமென உருவாக்கப்பட்ட தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சும் அதன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படும், அது மீறப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கைகள் வெளியிட்டு வரும் வழக்கமுள்ளது. தமிழ் மொழிக்கு சட்ட ரீதியாக நிர்வாக மொழிஉரிமை வழங்கப்பட்டு பதினான்கு ஆண்டுகள் எட்டிவிட்ட நிலையில் அதனைச் செயற்படுத்தாது அசமந்தப் போக்கிலுள்ள கொழும்பு மாநகர சபை கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகங்களின் செயற்பாடுகளையிட்டு அமைச்சர் வாசுதேவவும் அமைச்சும் கவனம் செலுத்தி ஏற்கனவே கூறியுள்ளது போல் சட்ட ரீதியாக செயற்படுவார்களா என்பதே இன்று கொழும்பு மாநகர தமிழ்,  முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ள கேள்வியாகும். வாய்ச் சொல்லில் காட்டுவதை அறிக்கைகளில் காட்டுவதை,  செயலில் காட்ட வேண்டும். அரசியலமைப்பை மதிக்க வேண்டும்  மதிக்கச் செய்ய வேண்டும்  இது நடைபெறுமா?

Saturday, October 26, 2013



சமஷ்டி ஆட்சி முறை என்பது சாத்தியமாகிற்று. இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்க பிரித்தானியா முன்வந்த பொழுதும் கூட முஸ்லிம்களால் ஐக்கிய இந்தியா என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இலங்கையில் மிக நீண்ட காலமாக ஒரு நிரந்தர தீர்வினை எட்டக்கூடிய வகையில் ஒரு காத்திரமான முடிவு ஏற்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் சர்வதேச ரீதியில் இனப்பிரச்சினை பற்றிய தீர்வுக்கான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகள் எவ்வாறான தீர்மானங்களை தம்முள் கூடி எடுத்துக் கொண்டாலும் அவை இன்றுவரையிலும் தமிழர்களுக்கு திருப்தியளிக்கும் முகமாக அமையவில்லை என்பது உலகறிந்த வெளிப்படையான உண்மையாகும். ஐ.நா. சபை தொடக்கம் ஐரோப்பிய ஒன்றியம் முதலாக ஆசிய பிராந்திய நாடுகள் வரைக்கும் இனப்பிரச்சினை தொடர்பாக அவரவர் சபைகளில் உரத்த தொனியில் குரல் எழுப்புகின்றதுடன் அவ்வப்போது ஏகமனதாக தீர்மானங்களையும்  நிறைவேற்றிய படியே இருக்கின்றனர். இவ்வாறான நாடுகளுக்கு மத்தியில் இந்தியா மத்திய மற்றும் மாநில மன்றத் தேர்தல்களில் இலங்கையின் பிரச்சினையினை ஒரு தாரக மந்திரமாக பயன்படுத்துவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையின் உள்நாட்டு அரசியல் பிரமுகர்களினாலும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களினாலும் சமஷ்டியினை நடைமுறைப்படுத்துவது பற்றிய ஒரு எண்ணக்கரு முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த சமஷ்டி ஆட்சி பற்றிய பேச்சு இன்று புதிதாக தோற்றம் பெற்ற ஒன்று அல்ல. 1919 ஆம்  ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய காங்கிரஸின் காலத்திலேயே இடம்பெற்றது எனலாம். 

அன்றைய சூழ்நிலையில் தமிழ் தரப்பினர் சமஷ்டி தொடர்பில் அவ்வளவாக ஈடுபாடு உடையவர்களாக விளங்காவிட்டாலும் சிங்களத் தலைமைகள் சமஷ்டி பற்றிய காரசாரமான வாதங்களை முன்வைத்து சமஷ்டியாட்சியினை ஆங்கிலேயர்களிடம் கோரியிருந்தனர். இவ்வாறு சிங்களவர்களுக்கு மத்தியில் சமஷ்டி பற்றிய பேச்சு முக்கியத்துவம் பெற காரணமாக அமைந்திருந்த விடயம் பற்றி சற்று ஆழமாக நோக்குமிடத்து அவர்கள் தம்முள் இரண்டு அணிகளாக  பிரிந்து இருந்ததுடன் அவர்களுக்குள் வெவ்வேறான அரசியல் கருத்துக்களையும் கொண்டிருந்தமையே ஆகும். இங்கு 1922 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை தேசிய காங்கிரஸினை தமது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்திருந்தவர்கள் கரை நாட்டு சிங்களவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும். இவர்களால் கண்டிச் சிங்களவர்களின்  கருத்துக்களுடன் உடன்பட்டு செல்ல முடியாமையினால் கண்டிச் சிங்களவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறி கண்டி அசம்பிளி (ஓச்ணஞீதூ அண்ண்ஞுட்ஞடூதூ) ஒன்றினை அமைத்தனர்.  இச்சபையானது 1928 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டொனமூர் அரசியலமைப்பு ஆணைக்குழுவினருக்கு வழங்கிய  அறிக்கையொன்றில் சமஷ்டி கோரிக்கையினை முன்வைத்துஅதனை ஆதரிப்பதாக கூறினர். தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக சட்ட மன்றங்களில் பேசப்படும் பொழுதும் சமஷ்டி ஒன்றே அரசியல் பிரச்சினைகள் அனைத்தையும்  தீர்க்க சிறந்த வழிமுறை என்று அடிக்கடி எடுத்துக் காட்டப்பட்டது. இதனையே பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஸ்தாபகரும் மூத்த அரசியல் தலைவருமான கு.ஙி.கீ.ஈ.  பண்டாரநாயக்க அவர்களும் தமது உரையில் கூறியிருந்தார். அவர் மேடைப் பேச்சில் அவ்வாறு கூறினார் என்று எடுத்துக் கொள்வதா அல்லது உண்மையில் இதய சுத்தியுடன் கூறினாரா என்பது தமிழ் தலைவர்களுக்கு ஒரு குழப்பத்தையே உண்டாக்கியிருந்தது அன்றைய சூழலில் . ஏனெனில் இதே சமஷ்டி வாத கருத்தை கூறிய கு.ஙி.கீ.ஈ.  பண்டார நாயக்க அவர்கள்தான் 1956 ஆம் ஆண்டு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் முகமாக தனிச் சிங்கள சட்டத்தை தான் ஆட்சிக்கு வந்ததும் அமுல்படுத்துவதாக உறுதியளித்தார். அதனை அவ்வாறே செய்தும் காட்டினார். 

இதனால் தான் தமிழர்களுக்கு அரசு வழங்குகின்ற  வாக்குறுதிகளில் நம்பிக்கையின்மை ஏற்பட ஆரம்பித்தது. தற்கால வாதங்களின் படி சமஷ்டியானது இலங்கையின் பூகோள அமைப்பிற்கு நடைமுறைச் சாத்தியமான தொன்றாக அமையுமா என்பது பற்றி ஆராய வேண்டியதொரு தேவை உள்ளது.  கோட்பாட்டு ரீதியில் சமஷ்டி என்பது பின்வருமாறு அமைகிறது. குறித்த ஒரு நாட்டினுடைய சகல அதிகாரங்களும்  மத்திய அரசுகள்,  மாநில அரசுகள் என்ற அடிப்படையில் இருவகையான அரசுகளிடம் பிரிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே இறைமையினை பிரயோகிக்கக் கூடிய வகையில் இறைமையுடன் தொழிற்பட ஏற்பட உருவாக்கப்பட்ட வகையில் யாப்பு வரையப்பட வேண்டும் என்பதே விதியாகும். இவ்வாறான சமஷ்டி ஆட்சி முறையினை இலங்கையில் அமுல்படுத்த முன்னர் நாம் இலங்கையின் அமைவிடம் மற்றும் வாழ்கின்ற மக்கள் தொகை,  காணப்படுகின்ற சமய , சமூக,  கலாசார விழுமியங்கள்,   பல்வேறு வகையான மொழியினை பேசுபவர்களது வீதம் என்பவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்ட அம்சங்கள்  எண்ணிறைந்து காணப்படுமிடத்தும் நிலப்பரப்பு அதிகமாக காணப்படுமிடத்தும் உள்நாட்டில் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்தே காணப்படுகிறது. இலங்கையினை பொறுத்தவரை பூகோள அமைப்பிலும் சரி பல்லினத் தன்மையிலும் சரி அளவுக்கு அதிகமாக எதுவுமே கிடையாது. நிலப்பரப்பு எனும்போது மக்கள் தொகைக்கு ஏற்றாற் போல் உண்டு. மொழி என்ற அடிப்படையில் நோக்குமிடத்து இரு பிரதான மொழிகள் காணப்படுகின்றன. ஆகவேதான் இந்தியாவைப் போன்று சமஷ்டி ஆட்சி முறை தேவையில்லை என்றும் அவ்வாறு ஏற்படுமாயின் வீணான நிர்வாக செலவுகளையும் காலதாமதத்தையுமே ஏற்படுத்தும் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இவர்களது வாதம் எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பதும் பலரது வினாவாக உள்ளது. 

ஏனெனில் இந்தியாவில் சமஷ்டி ஆட்சி சாத்தியமாகும் பொழுது ஏன் இலங்கையில் சாத்தியமாக முடியாது என்கின்றனர். இந்திய சமஷ்டியுடன் ஒப்பிட்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டியை நோக்கி  முயற்சி செய்வது என்பது இலங்கையின் பூகோள அமைப்பினையும் குடித்தொகையினையும் (Kandy Assembly) கவனத்திற் கொள்ளாமல் இருக்கின்றோம் எனலாம். இந்தியாவின் புவியியல் அமைவானது இலங்கையின் அமைவிடத்திலிருந்தும் அதிகம் வேறுபட்டது. இந்தியா பெரும் நிலப்பரப்பினை கொண்டிருப்பதுடன் இலங்கை போன்று இரு பிரதான மொழிகளை பேசுபவர்கள் கிடையாது. அங்கு ஏராளமான மொழிகள் பாவனையில் உண்டு.அவரவர் சமூக கட்டமைப்புக்கு ஏற்ப பண்பாட்டு அம்சங்கள் மாறுபட்டு காணப்படுகின்றன. ஆகவே தான் அங்கு இன்று வரையிலும் 28 இற்கும் மேற்பட்ட மாநிலங்கள் காணப்படுகின்றன. இதிலிருந்து அங்கு நிலவளம் அதிகம் என்பதுடன் சனத்தொகையும் அதிகம். அத்துடன் பல்லின கலாசாரம் மேலோங்கி காணப்படுவதால் சமஷ்டி ஆட்சி முறை என்பது சாத்தியமாகிற்று. இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்க பிரித்தானியா முன்வந்த பொழுதும் கூட முஸ்லிம்களால் ஐக்கிய இந்தியா என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் முஸ்லிம் லீக் தலைவரான முகம்மது அலி ஜின்னா தனியான பாகிஸ்தான் என்றார். சுதந்திரம் என்பது எமக்கு கிடைக்கும் பொழுது இருவேறு அரசுகளாக மலர வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அன்று இந்தியா முழுவதும் வாழ்ந்த முஸ்லிம்கள் உட்பட பாகிஸ்தானில் உள்ளவர்கள் மொத்தமாக 10 கோடி இஸ்லாமியர்கள் காணப்பட்டனர். 

தீர்மானம் சாதகமாக அமைந்து போனது. இந்தியா தனியாக தேசமாக தனக்கென சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்கியது.  இலங்கையின் நடைமுறை அரசியலமைப்பு ஏற்பாடுகளின் படி நோக்குமிடத்து சமஷ்டியாட்சிக்கு இடமில்லை என்பதும் தெளிவாக புலப்படுகிறது. ஏனெனில் 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட  அரசியலமைப்பு இலங்கையினை ஏக இறைமையுடைய ஒரு நாடாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன் ஓரங்கமுடைய பாராளுமன்றத்திற்கு பிரதான சட்டவாக்க தத்துவங்களை ஒப்படைத்துள்ளமையும் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசு என்ற வாசகத்துடன் ஒற்றையாட்சி அரசியலமைப்பினையும் கொண்டமைந்திருக்கின்றமையும் ஆகும். இங்கு மாகாண மற்றும் உள்ளூராட்சி பிரதேச  சபைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் அதேவேளை அவை அனைத்தும் மத்திய அரசாங்க யாப்பு விதிகளுக்கமைய அரசால் வரையறை செய்யப்படுகிறது. அந்த வகையில் யாப்பு ரீதியாக நோக்குமிடத்தும் சமஷ்டியினை நடைமுறைப்படுத்துவது சிக்கலானதொரு விடயமாகவே உள்ளது. இவ்வாறான அரசியலமைப்பு ஏற்பாடுகள் பிறிதொரு வகையில் சமஷ்டி என்பதை நடைமுறைச் சாத்தியமற்றதாக்குகிறது. நடைமுறையில் இருக்கின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பினை மாற்றியமைக்கக் கூடியதொரு சூழ்நிலையினை நோக்கும் பொழுதும் அதுவும் அவ்வளவு இலகுவாக மேற்கொள்ளக் கூடிய தொன்றல்ல. ஏனென்றால் நாட்டின் அரசியலமைப்பு எழுதப்படும்போதே இலகுவில் நெகிழ்ச்சியடைக் கூடியதாக எழுதப்படவில்லை. இதனால் அரசியலமைப்பினை மாற்றியமைக்க வேண்டுமாயின்  அதற்குரிய விஷேட பெரும்பான்மை ஆதரவினை பாராளுமன்றத்தில் பெறவேண்டும் அதாவது பாராளுமன்றத்தில் இருக்கின்ற பிரதிநிதிகளின் மூன்றில் இரண்டு அதிக பெரும்பான்மை தேவை. இந்த பெரும்பான்மை ஆதரவினை இன்று ஆட்சியிலிருக்கும்  அரசாங்கத்தினால் பெற்று நிறைவேற்ற முடியும்.

 ஆயினும்  சமஷ்டி அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதில் பல சிக்கல்கள் இருப்பதனால் அதுபற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை என இராஜதந்திர புத்திஜீவிகள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.  இவ்வாறான இராஜதந்திர ஆலோசனைகளுடன் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்ற இலங்கையின் புவியியல் தன்மையும் பல்லினத் தன்மையும் ஒழுங்கமையவில்லை. ஆகவே தான் சமஷ்டி ஆட்சி பற்றிய பேச்சுகளுக்கு அவ்வளவு ஆதரவும் முக்கியத்துவம் இல்லாமல் போயிற்று எனலாம். இருந்தும் தெற்கில் சில சிங்களத் தலைவர்களாலும் அதேவேளை சில தமிழ்த் தலைவர்களாலும் சமஷ்டி வாதம் முன்வைக்கப்படுகிறது. நிலப்பரப்பில் சிறிய அலகைக் கொண்ட இலங்கையில் சமஷ்டியை விட வேறு ஏதாவது தீர்வுகள் பற்றிய யோசனைகள் சாத்தியப்படுமிடத்து அதனூடாக அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது என்பது இல்லாமல் போகும். அதேவேளை பெரும்பான்மையினரின் அரசியல் நீரோட்டத்தினையும் பாதிக்காத விதத்தில் அமையும். இது நிரந்தர சமாதானத்தினையும் உருவாக்குவதுடன்  குறுகிய இனவாத போக்குகளை களைந்து பரந்துபட்டதோர் அரசியல் நோக்கில் சமத்துவமாக வாழ வழியமைக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறானதொரு விரிந்த நோக்கிலான கொள்கைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது ஊடாக அடிமை வாழ்வு அற்றுப்போகும். ஆனால் ஆட்சிக்கு  வரும் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்களின் செயற்பாடுகளில் தான் அது அமைந்துள்ளது. மாறாக அதிகாரத்தில் உள்ளவர்கள் மேலும் தமது அதிகாரங்களை அதிகரித்துக் கொள்ளும் நோக்கிலேயே அரசியலமைப்பை மாற்றியமைத்த வண்ணமே இருக்கின்றனரே ஒழிய எவரும் இதுவரையில் அதிகாரங்களை பரவலாக்கம் செய்வதனூடாக அனைவரதும் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என்ற நோக்கில் செயற்படுவதாக இல்லை. 

அன்றைய அரசியல் தலைவர்கள் தொடக்கம் இன்றுவரை உள்ளவர்கள் சமஷ்டியில் தீர்வு , பேச்சுவார்த்தையில் தீர்வு,  நல்லிணக்கத்தால் தீர்வு,  அதிகாரபரவலாக்கத்தினால் தீர்வு என்று ஏராளமான  வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டே இருக்கின்றனர்.  ஆனால் அவை நடைமுறைச் சாத்தியமானதொரு நிலை இன்றுவரை இலங்கையின் சரித்திரத்தில் இடம்பெறவில்லை. தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கும் உரிமைகளுக்காகவும்  முழுமையாக சர்வதேசத்தை நம்பியிருப்பது என்பதும் "மண் குதிரையினை நம்பி ஆற்றில் இறங்கினால் போல' என்கின்ற ஒரு நிலைப்பாட்டினை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். ஏனென்றால் சில ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் தீர்மானங்களும் எமக்கு பறைசாற்றி நிற்கின்றன. அவற்றின் செயற்பாடுகள் யாவும் கடந்த காலங்களில் நாம் அனைவரும் அவதானிக்கத்தக்கதொருவகையிலும் அமைந்திருந்தது. காலங்கடந்த நிலையில் தீர்மானங்களை எடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். மத்தியஸ்த ஐ.நா.வும் அப்படித்தான். அதனையே ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் மனம் திறந்து பேசும்போது வெளிப்பட்ட கருத்து எடுத்தியம்புகிறது. மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு அழிவை எதிர்நோக்கிய பொழுதெல்லாம் பார்த்துவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காத ஐ.நா. சபையும் கூட ஏராளமானவர்கள் அழிந்துவிட்ட நிலையிலும் உடமைகள் சேதமாக்கப்பட்ட பின்னர் அறிக்கைகளை கோவைப் படுத்தி மேசைகள் மீது அடுக்கி வைத்து விட்டு விவாதம் நடத்துகிறதே தவிர நிரந்தர தீர்வுக்கான முயற்சிகள் மந்த கதியிலேயே இடம்பெறுகின்றன. இந்த காலகட்டத்தில் தான் தமிழ் மக்கள் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பிரதிநிதிகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதற்கான ஆணையினை வழங்கியுள்ளனர். இதனை சரிவரப்  பயன்படுத்தி மாகாண சபை அதிகாரங்களையும் குறையேதும் இல்லாமல் முழுமையாக பெற்றுக் கொள்வதுடன் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் கோரிக்கையினையும் முன்வைக்க வேண்டும். சமஷ்டி நடைமுறைச் சாத்தியமற்றதாக இருப்பது போல் தென்பட்டாலும் அதிகாரப் பகிர்வு சாத்தியமாக காலம் கனிந்து வரும் .

Thursday, October 24, 2013



இலட்சக் கணக்கான  தமிழர்கள் உடல்களின்மீது கடந்துவந்த வரலாற்றையும் மறந்துவிட்டு கட்சி ஆதிக்கத்திற்காகவும் பதவி மோகத்திலும் கழுத்தறுப்புகளிலும் காட்டிக் கொடுப்புகளிலும் ஈடுபடும் இவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காதுவடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று சாதனை வெற்றியைப் பெற்று இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியடைகின்ற போதும் அத்தேர்தல் வெற்றியினதும் அதன் விளைவுகளினதும் அதிர்வுகள் இன்னும் அடங்கிய பாடாக இல்லை. ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மையப்படுத்திக் காணப்பட்ட இந்த அதிர்வுகள் தற்போது தமிழ்த்  தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே ஏற்பட்டு பிளவுகள் தோன்றத்  தொடங்கியுள்ளன.  தமிழ் அரசியல்  கட்சிகள், தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களிடையே என்றுமே காணப்படாத ஒற்றுமையென்பது தமிழர் வரலாற்றில் ஒரு சாபக்கேடாகவே உள்ளது. இத்தனை அழிவுகள், கொடூரங்கள், வேதனைகள், அனுபவங்களுக்குப் பின்னரும் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாது தமக்கிடையே வெட்டுக்குத்துக்களிலும் கயிறிழுப்புகளிலும் ஈடுபடுவது இன்றும் தொடர்வது தமிழர் எத்தனை வெற்றிகளைப் பெற்றாலும் அது நிலைக்காது என்பதையே காட்டுகின்றது.  வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு வெளிவந்த நாள் முதலே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனக்கூறப்படும். நம்பப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளிடையிலான சுயநல காய்நகர்த்தல்களும் வெட்டுக்குத்துகளும் கழுத்தறுப்புகளும் காட்டிக்கொடுப்புகளும் ஆரம்பித்துவிட்டன. 

ஆரம்பத்தில் உள்ளரங்கில் நடைபெற்று வந்த இந்தக் கூத்துக்கள் அமைச்சர் பதவி நியமனங்களுடன் வெளியரங்கில் மேடையேற்றப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக காண்பிக்கப்பட்டு வருகின்றன.  வடமாகாண சபைக்கான பொது முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட கயிறிழுப்புகள், அதன் பின்னர் கட்சிகளுக்கான வேட்பாளர் தெரிவுகள், போனஸ் ஆசன ஒதுக்கீடுகள், அமைச்சு ஒதுக்கீடுகள், அமைச்சர் தெரிவுகள், முதலமைச்சர் சத்தியப்பிரமாணம், உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணமென தொடர்கதையாக தினம் தினம் பங்காளிக்கட்சிகளுக்கிடையிலான மல்யுத்தப் போட்டியாக மாறிவிட்டது.  முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில் அவரை நீக்கி முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் பெயர் சிலரால் பிரேரிக்கப்பட்ட போதே கட்சிக்குள் கழுத்தறுப்புகள் ஆரம்பமாகிவிட்டன. மாவை சேனாதிராஜா முதலமைச்சராக வந்தால் அதனால் கட்சிக்கும் அரசுக்கும் அயல்நாட்டுக்கும் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை அனுமானித்தே அவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பதை திட்டமிட்டுத் தவிர்த்தவர்கள் தமது நோக்கத்திற்கு பொருத்தமானவராக விக்னேஸ்வரனைத் தெரிவு செய்திருக்க வேண்டுமென்றே எண்ணத் தோன்றுகின்றது. 

 தனது தலைமையினதும்  தலைமையை இயக்கும் சக்திகளினதும் நோக்கத்தை மாவை சேனாதிராஜா புரிந்து கொண்டாலும் கட்சிகளின் ஒற்றுமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை கருத்தில் கொண்டு முதலமைச்சர் வேட்பாளர் தெரிவிலிருந்து கண்ணியமாக ஒதுங்கிக்கொண்டு முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு வாக்களிக்க வேண்டுமென்ற பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால் கட்சித் தலைமையின் நோக்கம் அத்துடன் நின்று விடவில்லையென்பது அடுத்தடுத்த காய்நகர்த்தல்களில் தெளிவானது.  தமிழ் மக்களின் நாடிபிடித்துப் பார்த்து தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்ததுடன் பிரபாகரன் மாவீரன் என தேர்தல் பிரசார மேடைகளில் முழங்கி இமாலய வெற்றியையும் பெற்ற பின்னர் தனது அரச, அயல்நாட்டு விசுவாச காய்நகர்த்தல்களை கட்சித் தலைமை மேற்கொண்டது. ஒவ்வாரு விடயம் தொடர்பிலும் முடிவுகளை எடுக்க பங்காளிக் கட்சித்தலைவர்களை அழைத்து மோதவிட்டு வேடிக்கை பார்த்தபின் தாம் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த விடயங்களை கட்சித் தலைமை நிறைவேற்றியது.  

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த இரு போனஸ் ஆசனங்களில் ஒன்று ஏற்கனவே மக்கள் நல்லாட்சிக்கான இயக்கத்தைச் சேர்ந்த அஸ்மினுக்கு தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில்  மீதமிருந்த ஒரேயொரு ஆசனத்துக்காக ஒரு வாரத்துக்கு மேலாக கூடி ஆராய்ந்ததுடன்  அது தொடர்பில் மாவட்ட ரீதியாக குழப்பங்கள் ஏற்படவும் கட்சித்தலைமை வழி வகுத்தது. ஒரு போனஸ் ஆசனத்துக்காக கட்சித்தலைமை பிரதேசவாதத்தைத் தூண்டித்து என்றே கூறவேண்டும். அதேபோன்றே அமைச்சர்கள் தெரிவுகளிலும் மாவட்டங்களுக்கிடையில் போட்டித்தன்மையை ஏற்படுத்தவும் இடமளித்தது.  போனஸ் ஆசன தெரிவு, அமைச்சர்கள் தெரிவில்  பிரதேசவாதத்தையும் குழப்பங்களையும்  தூண்டிய கட்சித்தலைமை அதன் பின்னர் முதலமைச்சராகத் தெரிவான விக்னேஸ்வரன் யார் முன்பாக சத்தியப்பிரமாணம் செய்வது என்ற நாடகத்தைத் தொடங்கியது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாகவே சத்தியப்பிரமாணம் செய்வது என்பது ஏற்கனவே கட்சித் தலைமையாலும் முதலமைச்சராகத் தெரிவான விக்னேஸ்வரனாலும் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், அவரின் சத்தியப்பிரமாணம் தொடர்பில் தினமும் ஒவ்வொரு கதைகள் அவிழ்க்கப்பட்டு தமக்கு வாக்களித்த மக்களை முட்டாள்களாக்கும் வேலைகள் இடம்பெற்றன. 

முதலமைச்சர்  விக்னேஸ்வரன் எந்தக்கட்சியும்  சாராத பொதுவேட்பாளர். ஆனால் அவர் இன்று  தமிழரசுக்கட்சியின் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கின்றார். அவர்களின் தாளத்துக்கேற்ப ஆடுகின்றார் என்ற   குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தமிழரசுக் கட்சியின் தலைமை தான்  நினைத்ததைச் சாதித்துக் கொண்டு அதற்கான பொறுப்பை முதலமைச்சர் மீது சுமத்தும் போக்கே காணப்படு கின்றது. இதற்கு முதலமைச்சரும் தெரிந்தோ தெரியாமலோ துணை போய்க் கொண்டிருக் கின்றார். கட்சி வேட்பாளர் களுக்கான இட ஒதுக்கீடுகள், போனஸ் ஆசன ஒதுக்கீடு, அமைச்சரவை ஒதுக்கீடு, அமைச்சர்கள் தெரிவு போன்ற விடயங்களில் முதலமைச்சரை முன்னிறுத்தி தனது நோக்கத்தையே தமிழரசுக்கட்சித் தலைமை  நிறைவேற்றி யிருக்கின்றது. அதாவது தமிழரசுக் கட்சியின் குழந்தைக்கு முதலமைச்சர் தந்தையாக வேண்டியுள்ளது. போர்க்குற்றவாளியென தமிழ் மக்களால் குற்றம் சாட்டப்பட்டு சர்வதேச விசாரணை கோரும் நிலையில் ஜனாதிபதி முன்பாக சத்தியப்பிரமாணம் செய்யக்கூடாதென முழுத்தமிழினமும் பங்காளிக் கட்சிகளும் விடாப்பிடியாக நின்றபோதும் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு குடும்பத்துடன் அலரிமாளிகைக்கு சென்று ஜனாதிபதி முன்பாக விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை தமிழ் மக்களை அதிர்ச்சியும் விசனமும் அடைய வைத்தது.  

விக்னேஸ்வரனின் இச்சத்தியப்பிரமாண நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா,பங்காளிக்கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி போன்றோர் பங்கேற்கவில்லை. தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் மட்டும் கலந்து கொண்டார். தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென ஆனந்தசங்கரி பின்னர் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மூலம் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை தமிழ் மக்களிடம் மட்டுமன்றி பங்காளிக் கட்சிகளிடையேயும் கடும் கொதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் அமைச்சரவை நியமனம் தொடர்பில் விக்னேஸ்வரன்  எடுத்த அல்லது விக்னேஸ்வரனால்  எடுக்க வைக்கப்பட்ட தீர்மானங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பகிரங்க மோதலை ஏற்படுத்தின.

பிரதான கட்சியொன்றுடன் தேர்தலொன்றுக்காக அல்லது ஆட்சி அமைப்பதற்காக ஏனைய கட்சிகள் வைப்பதே கூட்டணி. இதில் தேர்தலாக இருந்தால்  கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் உரிமை அந்தக் கட்சிகளின்  தலைவர்கள், செயலாளர்களுக்கு உண்டு. அதேபோல் ஆட்சியமைப்பதாகவிருந்தால் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அமைச்சர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையும் அந்தந்தக் கட்சித் தலைவர்கள், செயலாளர்களுக்கே உண்டு. இதுதான் கூட்டணி தர்மம். ஆனால் வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனத்தில் முதலமைச்சரைப் பயன்படுத்தி தமிழரசுக் கட்சி சர்வாதிகாரப் போக்கிலேயே நடந்து கொண்டுள்ளது. வட மாகாண சபையில் 38 ஆசனங்கள் உள்ள நிலையில் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும் அதன் பங்காளிக் கட்சிகளான சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 6, செல்வம் அடைக்கலநாதனின் தமிழீழ விடுதலை இயக்கம் 5, சித்தார்த்தனின்  தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் 3 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள மேலதிகமாக இரு போனஸ் ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.  

இந்நிலையில், அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பல சுற்றுப் பேச்சுகளை தமிழரசுக் கட்சி நடத்திய நிலையில் இறுதிப் பேச்சுக்களின் போது பங்காளிக் கட்சித் தலைவர்களை அழைக்காமலேயே முதலமைச்சரின் பெயரில் முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதற்கிடையில் அமைச்சர்கள்  நியமனத்துக்கு பங்காளிக் கட்சிகளிடமிருந்து தகுதியானவர்களை சுயவிபரங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதியில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்களின் இணக்கமின்றி அவர்களின் சிபாரிசுகள் நிராகரிக்கப்பட்டு பங்காளிக் கட்சிகளில் யார் அமைச்சர் என்ற தீர்மானத்தை சர்வாதிகாரத்தனமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பெயரில் தமிழரசுக் கடசியே அறிவித்தது. இதனையடுத்தே  பதவிப் பிரமாண நிகழ்வு பகிஷ்கரிப்பு, தனித்த பதவிப் பிரமாணம், ஊடக அறிக்கைகள் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் பகையாளிகளாக மாறினர். பங்காளிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் அமைச்சுக்களைத்  தீர்மானிக்கும் உரிமை பிரதான தமிழரசுக் கட்சிக்கோ அல்லது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கோ இருந்தாலும் பங்காளிக் கட்சிகளில் யார் அமைச்சர் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை இவர்களுக்கில்லை. அதனை பங்காளிக் கட்சியின்  தலைவரோ செயலாளரோ தான் தீர்மானிக்க முடியும். அது அவர்களின் உரிமை. ஆனால் தமிழரசுக் கட்சியின் சர்வாதிகாரத்தால் அந்த உரிமை மறுக்கப்பட்டமை கூட்டணி மரபுக்கு விரோதமானது. 

இலங்கை அரசில்  பங்காளிக் கட்சிகள் உள்ள நிலையில் அதன் தலைவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னுரிமை கொடுப்பதைக் காண முடியும். அண்மையில் 11 பேருக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சர் நியமனங்களில் கூட பங்காளிக் கட்சித் தலைவர்களிடமிருந்தே அவர்களின் கட்சி சார்பில் பிரதியமைச்சர் பதவிக்குப் பெயர்களை பிரேரிக்குமாறு ஜனாதிபதி கேட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்த கண்ணியம், கூட்டணி மரபுக்கான கௌரவம் கூட தமிழரசுக் கட்சித் தலைமையிடமோ முதலமைச்சரிடமோ இல்லாதது கவலைக்குரியது.  அதுமட்டுமின்றி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சகோதரனுக்கு அமைச்சுப் பதவி கேட்டார். ஆனால் தகுதி அடிப்படையில் என்னால் கொடுக்க முடியவில்லையென முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குக்கு கூறியமை அவரின் நீதியரசர் பணிக்கும் முதலமைச்சர் பதவிக்கும் கூட்டணிக் கட்சிகளின் பண்பாட்டுக்கும் பொருத்தமானதல்ல. கட்சித் தலைவர்களிடையே  இடம்பெற்ற  விடயமொன்றை விக்னேஸ்வரன் பகிரங்கப்படுத்தியமை அவர் தன் பொறுப்பிலிருந்து விலகியமையைக் காட்டுகின்றது. சுரேஷ் பிரேமச்சந்திரன் தன் தம்பிக்கு அமைச்சுப் பதவி கேட்டதை விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதை சரியென யாராவது  வாதிடுவார்களேயானால் ஜனாதிபதி முன்பாக சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டுமென்பதில் யார் விடாப்பிடியாக நின்றார்கள் என்பதை சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்தினால் அதனையும் சரியென ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். ஏனெனில் முதலமைச்சரின் செயலர் இணைப்பாளர் தொடர்பில் சுரேஷ் பிரேமச்சத்திரன் ஏற்கனவே கோடிட்டுக்  காட்டியுள்ளார். 

எனவே அமைச்சர் நியமனத்தில் தமிழரசுக் கட்சியினதோ அல்லது முதலமைச்சரினதோ முடிவுகள் தவறானவை என்பதே பொதுவான கருத்து. அதேவேளை அமைச்சர் தெரிவுகளில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கூறி பங்காளிக் கட்சித் தலைவர்கள் எடுத்த நடவடிக்கைகளும் நியாயப்படுத்தப்பட முடியாதவை. அதிலும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எடுத்த முடிவுகளும் பின்னர் அடித்த பல்டிகளும் நகைப்புக்கிடமானவை. அதேபோன்று உறுப்பினர் பதவிப் பிரமாணம் தொடர்பில்  பங்காளிக் கட்சிகள் விடுத்த அறிக்கைகளும் அதன் பின்னர் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முறைகளும் வரவேற்கப்படக் கூடியவை அல்ல. மன்னார் மறை மாவட்ட ஆயரின் வேண்டுகோளைக்கூட அவர்கள் உதாசீனம் செய்தமை கவலைக்குரியது.  சர்வதேச நாடுகளினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் என நம்பப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எதிர்பார்க்காதளவுக்கு இமாலய வெற்றியைப் பெற்றுக்கொடுத்த வடக்கு மாகாணத் தமிழ் மக்கள் இன்று “இதற்குத் தானா ஆசைப்பட்டோம்’ என்ற வெறுப்பிலும் வேதனையிலும் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி  தமிழரசுக் கட்சியினதும் முதலமைச்சரதும் பங்காளிக் கட்சியினதும் கூத்துக்களினால் இன்று தமிழினமே ஏனையவர்களால் கொச்சைப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையில் எந்த அதிகாரமும் கிடையாதெனக் கூறியவர்கள் எதற்காக அமைச்சுப் பதவிகளுக்கு இவ்வாறு அடிபட்டுக் கொள்கிறார்கள் என்ற கேள்விகளே இன்று அதிகம்.

வடக்குத் தமிழனின் ஒற்றுமையை, இலட்சியத்தைப் பார்த்து வியந்த சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் மட்டுமன்றி  வெளிநாட்டினர் கூட இன்று தமிழகக் கட்சிகளின்  ஒற்றுமை இது தானா?  என கேலி பேசும் நிலைக்கு தமிழினத்தைக் கொண்டு வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதற்கு இன்னொரு நாள் வடக்கு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டி வரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கு மக்கள் கொடுத்த கௌரவம், இமாலய வெற்றி, அத்தனையையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டும் இலட்சக் கணக்கான  தமிழர்கள் உடல்களின்மீது கடந்துவந்த வரலாற்றையும் மறந்துவிட்டு கட்சி ஆதிக்கத்திற்காகவும் பதவி மோகத்திலும் கழுத்தறுப்புகளிலும் காட்டிக் கொடுப்புகளிலும் ஈடுபடும் இவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. தமிழினத்தின் இலட்சியத்தை வைத்துக் கொண்டு இவர்கள் சகுனித்தன பகடையாடுகின்றனர்.இலட்சியத்திலிருந்து தவறியவர்களை தமது இதயத்திலிருந்து தூக்கயெறிந்து விடுவதே தமிழ் மக்களின் கொள்கை. இதனை இந்த வருட மாகாண சபைதேர்தல் முடிவுகளில் சிலர் பெற்ற படுதோல்விகள் மூலமும் தெரிந்து கொள்ள முடியும். எனவே தற்போது இலட்சியத்தை கைவிட்டு சுயநல இலக்கினை கையிலெடுத்துக்கொண்டவர்கள் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அடுத்துவரும்  சந்தர்ப்பங்களில் அவர்களும் நிச்சயம் தமிழ் மக்களால் தூக்கியெறியப்படுவார்கள்.

Tuesday, October 22, 2013



தமிழ் மக்களுடைய  அதிகாரப் பரவலாக்கம் பற்றிய போராட்டம்  "உளவியல் தேவையாகும்'.
13 ஆவது  அரசியல் அமைப்புத் திருத்தம், மாகாண சபை அதிகாரங்கள், மாகாண  சபைத் தேர்தல்கள் இலங்கை அரசியலில் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இவ்விதமான கால கட்டத்தில் சிறுபான்மை இனமாகிய   முஸ்லிம்களின் மாகாண  சபை அரசியல் பற்றி நோக்குவதாகவே இக் கட்டுரை காணப்படுகிறது. குறிப்பாக இலங்கையிலுள்ள மாகாண சபைகளை எடுத்துக் கொண்டால் கிழக்கு மாகாணத்தைத் தவிர்ந்த  ஏனைய மாகாணங்களில் முஸ்லிம்களுடைய செல்வாக்கு இல்லையென்றே கூறலாம். கிழக்கு மாகாணத்தைத் தவிர்ந்த எந்தவொரு மாகாண சபையிலாவது முஸ்லிம் அமைச்சரொருவரைக் கண்டு கொள்ள முடியாது. ஆகவே முஸ்லிம்களும் மாகாண சபையும் பற்றி ஆராய்வராயின் அது கிழக்கு மாகாணத்தையே முக்கியத்துவப்படுத்துகின்றதை மறுக்க முடியாது.  1987.07.29 ஆம் திகதி இலங்கை  இந்திய  ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் உருவாக்கப்பட்டது. 

வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு அரசியல் உரிமைகளை  பெற்றுக் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் முக்கிய அம்சமாகும். இலங்கை  இந்திய  ஒப்பந்தப்படி மாகாண சபைகளை உருவாக்குதல் , மாகாணங்களை ஒன்றிணைத்தல் , மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் , கிழக்கு மாகாணத்தில் உத்தேச மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு, அரச கரும மொழிச் சட்டங்கள் போன்ற விடயங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மையினராக வாழ்கின்றார்கள். இலங்கையின் மொத்த சனத்தொகையில்  சுமார் 9%  முஸ்லிம்களாவார். . கிழக்கு மாகாணத்தில் மொத்த சனத்தொகையில் 32% முஸ்லிம்களாவர்.  கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டே முஸ்லிம்களுடைய அரசியல் 1988 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக அஷ்ரப் தலைமையில் உருவாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கென்ற தனியானதொரு அரசியல் பிரவேசம், கிழக்கு மாகாணத்தில் இருந்தே தோற்றம் பெற்றது.   1988 ஆம் ஆண்டு வட மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் ஒன்றிணைக்கப்பட்டு வடக்கு ,கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் இடம்பெற்றது. 

கிழக்கு மாகாணத்தில் 33% பெரும்பான்மையைக் கொண்ட முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு இணைப்புடன் அரசியல் நிர்க்கதிக்கு ஆளாகின்றனர். இதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஆங்காங்கே தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே கலவரங்கள் ஏற்பட்டமையும் இந்திய இராணுவம் அவற்றைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையும் முஸ்லிம்களுக்கு மேலும் ஏமாற்றத்தை அளித்தது.  முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் அவர்கள் அதிகாரப் பகிர்வில் அதிகளவு ஆர்வம் காட்டாவிட்டாலும் ஆரம்ப கால மாகாண சபை முறையானது பெரும் ஏமாற்றத்தையே அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தது. கிழக்கு மாகாணத்தை தமக்கு ஒரு அரசியல் தளமாக்க வேண்டுமென்ற முஸ்லிம் அரசியல் எதிர்பார்ப்புக்கு ஜே.ஆர். ஜெயவர்தனவின் நிறைவேற்று அதிகாரம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதாவது வடக்கு கிழக்கு மாகாணம்  ஒன்றிணைந்த தேர்தலில் சிறுபான்மை  தமிழ் மக்கள் எதிர்பார்ப்பையும் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பையும் குழிதோண்டிப் புதைத்தது. இத் தேர்தலினை  தமிழீழ  விடுதலைப் புலிகள் கூட எதிர்த்தனர். இந்திய இராணுவத்தின் அனுசரணைப் பெற்றோரும் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்க பிரதிநிதிகளுமே வடக்கு, கிழக்கு மாகாண சபையில் நியமிக்கப்பட்டனர்.   மாகாண சபை ஆரம்பமே  முஸ்லிம்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. நாட்டில் பின்னர் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளினால் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இயங்கவில்லை. எவ்வாறாயினும் வடக்கு  கிழக்கு தற்காலிக இணைப்பு முஸ்லிம்களின்  எதிர்ப்புக்கு மத்தியிலும் 2006 ஆம் ஆண்டு வரை அமுலில் இருந்தது. 2006 ஆம் ஆண்டு உயர்  நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டன.  

 அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 52% வாக்குகளைப் பெற்ற ஐக்கிய  மக்கள் சுதந்திர முன்னணி  வெற்றி பெற்றது. இத் தேர்தலில் வெற்றி பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)  முதலமைச்சராகப் பதவி ஏற்றார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. அத்துடன் ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட ஹிஸ்புல்லாவின் முதலமைச்சர் கனவும் கை கூடவில்லை. எனவே இரண்டாவது தடவையாகவும் முஸ்லிம்கள் மாகாண சபை முறையில் ஏமாற்றம் அடைந்ததை இது எடுத்துக்காட்டுகின்றது.  2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களைப் பெற்று 14 ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியை அமைத்தது. இதன் போது முதன் முதலாக முஸ்லிம் ஒருவர்  கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். முஸ்லிம் ஒருவர்  முதலமைச்சராக வரவேண்டும் என்ற இலக்கை மையமாக வைத்தே ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம், ஹலால் பிரச்சினை முஸ்லிம்களுக்கு எதிரான பொதுபலசேனாவின் நடவடிக்கைகளை மையமாக வைத்து அரசாங்கத்திற்கு எதிராகத்  தேர்தல் பிரசாரம்  மேற்கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைத்ததானது கிழக்கு மாகாண முஸ்லிம்களை மேலும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

தேர்தல் முடிவில் இலங்கைத்  தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களைப் பெற்றாலும் ஆட்சி அமைக்கக் கூடிய பலம் அதற்கு இருக்கவில்லை.  சிறுபான்மை மக்களின் பலம் கொண்ட கிழக்கு மாகாண சபையை உருவாக்க இருந்த சந்தர்ப்பத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இல்லாதொழித்தது. தங்களுடைய அமைச்சுப் பதவிகளையும் ஏனைய வரப் பிரசாதங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் சுயநல  அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருந்தது  குறிப்பிடத்தக்கது.   எவ்வாறாயினும் தற்போதைய கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் முஸ்லிம் பிரதேசங்களில் அபிவிருத்தி ஏற்பட ஆரம்பித்துள்ளதை மறுக்க முடியாது. ஆனாலும் கிழக்கு மாகாண சபையின் ஆளுநரின் அதிகாரங்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் ஜனாதிபதியினுடைய அதிகாரங்களை  நேரடியாக பிரயோகிக்கக் கூடிய ஒருவராக ஆளுநர் காணப்படுகின்றார். இதனால் தான் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தங்களுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.  தற்போது வட மாகாண சபைத் தேர்தல்   அறிவிக்கப்பட்ட நிலையில் 13 ஆவது அரசியல் சீர்த்திருத்தம் பற்றி மீண்டும் பேசப்படுகின்றது. 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ், காணி மற்றும் மாகாணங்கள் ஒன்றிணைத்தல் ஆகிய அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்.  அல்லது மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற யோசனை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில்  எதிர்வரும் வட மாகாண   சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் இவ் அதிகாரங்கள் சிறுபான்மைத் தமிழ் மக்கள் கைகளில் போய்விடக் கூடா து என சிங்களக் கடும் போக்குக் கட்சிகளும் எதிர்பார்க்கின்றன. 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இத் தெரிவுக் குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. ஏனெனில் மு.கா. இந்த 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நீக்குவதை யிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றமையாகும்.  

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியோர் தமிழ் மக்கள் கோரிய அதிகாரப் பகிர்வு முறையை ஒருபோதும் கோரியதில்லை. விடுதலைப் புலிகளுடனான பேச்சு வார்த்தைகளின் போது தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற தொனியிலேயே முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரப் பரவலாக்கம் பற்றிப் போராட்டம் காணப்பட்டதேயொழிய முஸ்லிம்களுக்கென்ற தனியான அதிகாரப் பகிர்வைக் கோரி போராடவில்லை எனலாம். 1990 களில் விடுதலைப் புலிகளினால் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். எனினும்  இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளமையை இலங்கைச் சிறுபான்மை மக்களைப் பொறுத்தமட்டில் வரவேற்கத் தக்க விடயமாகும். கிழக்கு மாகாண சபை மூலம் கிழக்கு முஸ்லிம்கள் அனுபவிக்கும் அரசியல்   மற்றும் பொருளாதார  நன்மைகளை இழந்து விடக் கூடாது என்பதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்காகும்.

 மாறாக தமிழ் மக்களின் அதிகாரப் பரவலாக்கப் போராட்டத்துக்கு இதனை ஒப்பிட முடியாது. தமிழ் மக்களுடைய  அதிகாரப் பரவலாக்கம் பற்றிய போராட்டம்  "உளவியல் தேவையாகும்'.  அதனை இலகுவாகத் தீர்க்க முடியாது. ஆனால் முஸ்லிம்களுடைய அதிகாரப் பரவலாக்கம் பற்றியப் போராட்டம்"பொருள்மைய தேவையாகும்'இதனைச் சில பொருளாதார வளங்களை வழங்குவதன் மூலம் தீர்க்கலாம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய முஸ்லிம் அரசியல் வாதிகள் பட்டம் பதவிகளுடன் தமது போராட்டங்களை முடக்கிக் கொள்வது இதற்குச் சிறந்த உதாரணமாகும்.    13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறையில் குறிப்பாகக் கிழக்கு மாகாண சபையில் 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னரே முஸ்லிம்கள் உண்மையாக ஆட்சி அதிகாரம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். ஆகவே மாகாண சபை முறையில் அதிகாரங்கள் குறைக்கப்படுவதை கிழக்கை மையமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பதில் எவ்விதமான ஆச்சரியமும் இல்லை

Thursday, October 17, 2013


தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதை அடையாளம் காட்டியுள்ளார்....
இலங்கை அந்நியர் ஆட்சியின் பிடியிலிருந்து விடுபட்டதிலிருந்து சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான அமைதியின்மையும் நல்லுறவும் சீர்குலைந்தன. பாராளுமன்றம் நிறைவேற்றிய பிரஜாவுரிமைச் சட்டம் ,  சிங்களம்  மட்டும் ஆட்சி மொழி என்ற சட்டம் ஆகியவற்றின் மூலம் இரு சாராருக்குமிடையிலான நல்லுறவுகள் மேலும் சீர்குலைந்தன. பண்டா  செல்வா ஒப்பந்தம் 1957 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ,  எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கும்  இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அது பண்டாரநாயக்க  செல்வநாயகம் ஒப்பந்தம் என்று சொல்லப்படும். அதில் தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதை அடையாளம் காட்டியுள்ளார். ஒப்பந்தத்தில் சமஷ்டி அரசியல்முறை,  சுயாட்சி ,  வடக்கு ,  கிழக்கு மாகாணங்களில் இணைந்த அவ்விருமாகாணங்களும் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடம் ,  பாரம்பரிய தமிழர் தாயகம் ,  உள்ளக சுயநிர்ணயம் ,  தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற கோட்பாடுகள் இன்று உரக்கப் பேசப்படுகின்றன. முஸ்லிம்களும் ஒரு தேசிய இனமே. இந்த பண்டா  செல்வா ஒப்பந்தம் மூலம் முஸ்லிம்களுக்கும் ஒரு பிராந்திய சபை உருவாக்கப்பட்டது. அவ் வுடன்படிக்கையின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் கட்டாயமாக இரண்டு பிராந்திய சபைகள் (Regional Council) இருக்க வேண்டும். ஒன்று தமிழர்களுக்கு மற்றையது முஸ்லிம்களுக்கு எனக் கூறப்பட்டுள்ளன. 1965 ஆம் ஆண்டு மேலும் டட்லி   செல்வா ஒப்பந்தமும் செய்யப்பட்டு பின்பு இந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தினால் நாடு பிரியும் என்பதை வலியுறுத்தி பௌத்த மகா சங்கத்தின் ஒரு பகுதியினரும் பிரபல்யமான ஊடகங்களும் UNP  கட்சித் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கடுமையான இன உணர்வுகளைத் தூண்டும் பிரசா ரங்களை மேற்கொண்டனர். அவற்றால் பீதியடைந்த பிரதமர் உடன்படிக்கையை இரத்துச் செய்வதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 1958ஆம் ஆண்டு தமிழருக்கு விரோமாக இனக் கலவரம் ஏற்பட்டது. இதன் பின் 1960ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு சுதந்திரக் கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்க  UNP  செல்வநாயகம் ஆகியோருக்குமிடையில் ஓர் இணக்கம் ஏற்பட்டது. அது கைச்சாத்திடப்படாத வாய் மொழியிலான ஒரு ஒப்பந்தமாகும். 

தமிழர்கள் தேர்தலில் ஆதரவு வழங்குவதற்குப் பதிலாக பண்டாரநாயக்க  செல்வநாயகம் ஒப்பந்தத்தை தனது கட்சி நடைமுறைப்படுத்தும் என சிறிமாவோ பண்டாரநாயக்க வாக்குறுதியளித்தார். தேர்தலில் சுதந்திரக் கட்சி 75  ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மைப் பலத்தையும் பெற்றது. பாராளுமன்றம் கூடிய போது வில்லியம் கொப்பலாவ தேசாதிபதியின் கொள்கைப் பரிந்துரை தமிழிலும் வாசிக்கப்பட்டது. இதனைத் தவிர உறுதி மொழிகள் தொடர்பாகப் புதிய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. அது தமிழருக்கு எதிரான போக்கினைத் தீவிரப்படுத்தியது. நீதி பரிபாலனமும் சிங்கள மொழியில் மட்டும் நடைபெற வேண்டும் என்ற சட்டத்தையும் நிறைவேற்றியது. இதனால் அரசாங்கத்தின் அரசகரும மொழிச் சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் சாத்வீகப் போராட்டங்களை நிகழ்த்தினார்கள். அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி இராணுவத்தின் மூலம் எதிர்ப்பியக்கத்தை அடக்கியது. இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெரும்பாலும் அப்பொழுது மாறி மாறி ஆட்சிக்கு வரும் UNP,  SLFP போன்ற கட்சிகளின் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்று பாராளுமன்றம் சென்ற போதிலும் ,  வடக்கு ,  கிழக்கு மாகாணங்களில் வசித்த முஸ்லிம்கள் தங்களது அரசியல் பிரதிநிதித்துவத்தை தமிழர்களின் அரசியற் கட்சிகளினூடாகவே பாராளுமன்றம் சென்றனர். அவ்வாறு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைத் தமிழர் கட்சியினூடாகப் பெற்ற பின்பு ஆளும் கட்சிகளான UNP ,  SLFP போன்ற பேரின கட்சிகள் ஆளும் கட்சிகளாக இருந்த வேளைகளில் அதில் சேர்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்ற வரலாறுகள் நிறையவே உண்டு. அந்த வகையில் MS காரியப்பர் ,  நிந்தவூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் MM முஸ்தபா, சம்மாந்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் MA அப்துல் மஜீட் போன்றவர்களை உதாரணமாகக் கூறலாம்.

இலங்கை முஸ்லிம்களுக்கு 1987 ஆம் ஆண்டிலிருந்தே முஸ்லிம் அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள் எப்போலுதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் பங்கெடுக்காமல் விட்டாலும் தமிழ்த் தலைமைகள் முஸ்லிம்களை கைவிடாமல் முஸ்லிம்களும் வடக்கு, கிழக்கு பூர்வீகம் கொண்டவர்கள் தான் என்பதனை உறுதியாகக் கருதி தமிழர்களின் அகிம்சைப் போராட்டம் தொடக்கம் ஆயுதப் போராட்டம் வரைக்கும் முஸ்லிம்களும் தமிழ் பேசும் இனம் என்பதனைக் கூறத் தவறவில்லை. 1974 இல் புத்தளத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குள் படுகொலை செய்யப்பட்ட போது பாராளுமன்றத்தில் தந்தை செல்வா முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் முஸ்லிம்களுக்கும் தமிழ்த் தலைமைகள் தான் பாராளுமன்றம், சர்வதேசம் வரை குரல் கொடுக்கின்றனர். 1987 க்குப் பின்பு 30 வருடங்கள் சென்றதும் தமிழரின் நிலைமை ஒரு புதிய பரிணாமத்தைப் பெற்றது. 1970 களில் பல புதிய தமிழ் இளைஞர் அமைப்புகள் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தன. அவற்றை ஒடுக்க அரசாங்கம் மேற்கொண்ட அடக்கு முறையும் ஜனநாயக விரோதமான மனித உரிமைகளை மீறிய சட்டங்களும் வெளிநாடுகளின் கவனத்தைப் பெற்றன. அப்பொழுது அதிக சக்தி வாய்ந்தவராக இந்திராகாந்தி பிரதமராக இருந்தார். இலங்கையில் இனங்களுக்கிடையில் அமைதி நிலையையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தக்கூடிய  ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்பது அவரின் நிலைப்பாடாகும். அந்தத் தீர்வு இலங்கையின் ஐக்கியத்தைப் பேணக்கூடிய நிலையில் அமைய வேண்டும் எனவும் கூறினார். 1984 லேயே அவர் அகால மரணமானார். அதன் பின்பு அவரின் புதல்வர் ராஜீவ்காந்தி இந்தியப் பிரதமரானார். இலங்கை தொடர்பாகத் தாயார் கடைப்பிடித்த கொள்கையைப் பின்பற்ற வேண்டிய நிலைப்பாடு அவருக்கு இருந்தது. அந்தக் கட்டத்தில் இலங்கையிலேயே உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய தமிழ் இயக்கங்களை அழித்து விட்டார்கள். போர் அவர்களுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான நேரடியான போராகியது. அமெரிக்கா போன்ற பலம் பொருந்திய மேற்குலக நாடுகள் இந்திய அரசாங்கத்திற்கு  ஆதரவளித்தன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தினை உக்கிரமான போரின் மூலமாக அரசபடைகள் கைப்பற்றின. அந்த வெற்றியைத் தொடர்ந்து அரச படைகள் யாழ்ப்பாண நகரத்தை நோக்கி முன்னேற பாரிய முயற்சிகளை கொண்டன. அந்நகரத்தைக் கைப்பற்றுமிடத்து 50,000 பொது மக்கள் வரை உயிரிழக்க நேரிடும் என பதவியில் இருந்த பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தன. இவ்வாறு ஏற்படவிருந்த பெரும் அழிவினைத் தடுப்பதற்காகவே இந்திய அரசாங்கம் உடனடியாத் தலையிட்டு போரை நிறுத்தியது. இலங்கை அரசாங்கத்தோடு இந்திய 1987 இல் ஒர் உடன்படிக்கையை உருவாக்கிறது. அதன் முன்னுரையில் கீழ்வரும் விடயங்கள் அழுத்தமாகக் கூறப்பட்டன. இலங்கை சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகியோர் வாழ்கின்ற நாடு. அவர்கள் எல்லோரும் தங்கள் மொழிகளையும் சமய நெறிகளையும் பண்பாட்டு மரபுகளையும் பேணிக் காப்பதற்கு உரிமையுடையவர்கள். சிங்களமும் தமிழும் இலங்கையின் ஆட்சி மொழிகளாக அமையும். ஆங்கிலம் தொடர்பு மொழியாகும். வட கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களுடைய வரலாற்று வதிவிடம். அங்கு அவர்கள் காலா காலமாக வேறு மக்களோடும் கூடி வாழ்ந்துள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். ஓர் ஆண்டிற்குள் இந்த இணைப்பு தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் ஒரு சர்வஜன வாக்குரிமை நடத்தல் வேண்டும். இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குதல்  அடிப்படையில் இவ்வுடன்படிக்கை 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் அரசியல் அமைப்பில் உள்ள சிங்கள மயமாக்கம் தொடர்பான அம்சங்களை நீக்குவது போல அமைந்தது. இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் சற்று முன்னேற்றகரமான ஒரு ஒப்பந்தமாக இதனைக் கருத முடியும். இந்த ஒப்பந்த மூலமான மாகாண சபைகள் இன்று இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தமானது ஒப்பந்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வடக்கு, கிழக்கு தவிர நாட்டில் எல்லா மாகாணங்களிலும் நடைமுறையில் உள்ளன.

தற்பொழுது மிக முக்கியமாக 2013.09.21 இல் தான் வட மாகாணத்திற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கூட்டமைப்பு 30 ஆசனங்களைப் பெற்று, மேலும் இது அபிவிருத்தி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வட பகுதி மக்கள் அரசியல் உரிமைக்காக முக்கியத்துவம் கொடுத்து ஆணை பிறப்பித்துள்ளமையை வட பகுதித் தேர்தல் காட்டுவதுடன், இது உலகத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. இந்தத் தேர்தலில் தமிழர்கள், கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று அமோக வெள்ளி பெற்றது. இதில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்டவாறான காணி, பொலிஸ் அதிகாரங்கள் அந்த மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்கின்ற விடயம் சம்பந்தமான எதிர்பார்ப்பில் தமிழ்க் கூட்டமைப்பு இலங்கை அரசையும் சர்வதேசத்தின் உதவியினையும் பெற்றுக் கொள்ளவென முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வுடன்படிக்கை இலங்கை ஒரு பல்லின சமூகப் பண்பாட்டு அம்சங்களைக் கொண்ட நாடு என்பதும், அவர்கள் அனைவரும் இலங்கை அரசியலின் பங்கு பெறும். மனித உரிமைகள் அனைத்தையும் பேணிக் கொள்வதற்கும் தகுதியுடையவர்கள் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கை சர்வதேச ஒப்பந்தம் என்பதில் சர்வதேச அரங்கில் அங்கீகாரத்தைப் பெற்றது. அமெரிக்கா சோவியத் யூனியன் போன்ற வல்லரசு நாடுகளும் அதன் அடிப்படை அம்சங்களை ஒப்புக் கொண்டன. இடைக்கால நிர்வாகமொன்றை உருவாக்குவதற்கு ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் முயற்சிகளை மெற்கொண்டது. 

இந்த இடைக்கால நிர்வாகம் தொடர்பாக விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டது. உத்தேச இடைக்கால நிர்வாக சபையிலுள்ள 15 அங்கத்தவர்களில் 12 பேரையும்அவர்களே நியமிப்பார்கள் என்றும் சபையின் தலைவரை அவர்கள் சிபாரிசு செய்யும் மூன்று பேர்களிடையே ஒருவரை அரசாங்கம் நியமிக்கும் என்றும் இரு அரசாங்கங்களும் ஒப்புக் கொண்டன. 70,000 இந்திய இராணுவத்தினர் இலங்கையிலே தங்கி இருந்த காலத்தில் இடைக்கல நிர்வாகத்தைத் தமிழர் தரப்பினர் ஏற்றுக் கொண்டிருப்பின் வட கிழக்குப் பிராந்தியத்தில் எல்லா ஆட்சி அதிகாரங்களையும் தமிழ் பேசும் மக்களின் சார்பில் அவர்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், தமிழ்த் தரப்பினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளைப் பொறுத்தவரையில் இதனால் ஏற்பட்ட விளைவுகள் பாரதூரமானவை. மாகாண சபைகள் அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. மாகாணங்களின் நிர்வாகத்தை பொறுத்தமட்டில்  அதிகாரங்கள் மூன்று தொகுதிகளாக வகை செய்யப்பட்டன. மாகாண சபைகளுக்குட்பட்ட விடயங்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் வரும் விடயங்கள், பொது விடயங்கள் என்று மூன்று பகுதியாக அமைந்தன. அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள். அவை அரசாங்கத்தால் இரத்துச் செய்யக்கூடியவை. ஆயினும், தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களையுடைய மாகாண சபைகளை உருவாக்கியமையும் பெரும்பான்மை அங்கத்தவர்களின் ஆதரவுடைய ஒருவரை முதலமைச்சராக நியமிப்பதற்கு வகை செய்தமையும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். ஆயினும், தமிழ்த் தரப்பில் அரசாங்கத்தோடு போர் புரிந்த பலமான இயக்கமானது மாகாணசபை நிர்வாகத்தில் பங்குகொள்ள மறுத்தமையால் வட கிழக்கு மாகாணசபை உறுதியாக செயற்பட முடியவில்லை. 

 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எந்தவொரு மாகாண சபையினையும் தனியாக  கலைக்க  முடியாது என்று  எல்லா மாகாண சபைகளையும் ஏக காலத்திலேயே கலைக்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டமை வரவேற்கத்தக்க சட்ட வரையறையாகும். தொடரும்.... ஆயினும், 1989  இல் பாராளுமன்றத்திற்குத்  தெரிவாகிய தமிழ்ப் பிரதிநிதிகள் ஏனையோருடன் கூடி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வட கிழக்கு மாகாண சபையையும் கலைப்பதற்கு துணைபுரிந்தனர். சட்டத்தில் வழங்கப்பட்ட காப்பீட்டையும் நிராகரிப்பதற்கு தமிழர்களே துணையாக இருந்து விட்டனர். இலங்கையிலே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மிகக் குறைவானவை என்பதை அக்கால   இந்திய அரசாங்கம் உணர்ந்து கொண்டது. இந்திய சிந்தனையாளர்களும் அரசியல் விமர்சகர்களும் ஜனநாயக ஆட்சி நிலவுகின்ற நாடுகளின் அரசாங்கங்களும், இக்காலகட்டத்தில் சமஷ்டி மூலமான ஓர் அரசியலமைப்பே இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வாகும் என்று கருதத் தொடங்கினார்கள். தென்னிலங்கையில் அப்போதிருந்த புதிய அரசியல் கட்சியான மகாஜனக் கட்சியை உருவாக்கிய மக்களின் அபிமானத்தை பெற்ற முதன்மை நடிகரான விஜயகுமாரதுங்க இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பாட்டார். தீவிரமான இனவாதிகளினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் மூலம் சந்திரிகா பண்டாரநாயக்க பிரதமரானார். பின்பு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமுலாக்கப்பட்ட யுத்த நிறுத்தம் நெடுங்காலம் நீடிக்கவில்லை. மிகவும் சிக்கலான உணர்ச்சி பூர்வமாகிவிட்ட பிரச்சினைகள்  பற்றி சுமுகமாகப் பேசக்கூடிய இராஜதந்ததிர முறையிலான நுட்பங்கள் இரு சாராகுக்குமிடையிலும் காணப்படவில்லை

 1996 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட புதிய அரசியலமைப்பிற்கான நகல் திட்டம் பல முன்னேற்றகரமான அம்சங்களைக் கொண்டிருந்தது. இறைமை எல்லோருக்கும் உரியது. இந்த ஆவணத்திலே தான்  இறைமையானது நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது என்ற சிந்தனை ஒப்புக் கொள்ளப்பட்டது. அது மக்களின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாலும் பாராளுமன்றத்தினாலும் பிராந்திய சபைகளாலும் பிரயோகிக்கப்படுமென்று சொல்லப்பட்டது பெரும்பான்மையினர் ஆளப்படுவோர் என்ற நிலைக்குப் பதிலாக அனைத்து இனங்களும் சமத்துவமானவை என்ற கருத்து இதில் அடங்கியிருக்கின்றன. தென்னாபிரிக்காவிலுள்ள சமஷ்டி முறையைப் போன்ற ஆட்சியமைப்பை ஏற்படுத்துவது அந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இலங்கை இறைமையுடையது என்று பிராந்தியங்களின் இணைப்பான ஐக்கியப்படுத்தப்பட்ட நாடு என்று அதிலே சொல்லப்பட்டது. இந்த யோசனை இலங்கை அரசியலமைப்பு வரலாற்றில் முதன் முறையாக அரசாங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட சிந்தனை என்பதும் குறிப்பிடத்தக்கது. பிராந்தியங்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் மாகாண சபை அமைப்பிலுள்ள பலவீனங்ஙகளை நீக்குவதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டன. 13 ஆம் அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தில் அதிகாரங்களைப் பற்றிச் சொல்லப்படுகின்ற மாகாண சபைகளுக்கும் பொதுவானவை என்ற அதிகாரங்கள் பிராந்திய சபைக்கு வழங்குவது என்றும் அதிலே சொல்லப்பட்டது. காணி முதலாக பிரதானமாக எல்லா விடயங்களிலும் பிராந்திய சபைகள் அதிகாரம் கூடிய வாய்ப்புகள் அதில் அடங்கியிருக்கின்றன. இந்த மாநிலம் ஒன்றுக்குரிய எல்லா அதிகாரங்களையும் பிராந்திய சபைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. பேச்சுவார்த்தையின் மூலம் மேலும் கூடுதலான வாய்ப்புகளைப் பெற்றிருக்கக்கூடும். ஆயினும், அன்று பலம் கொண்டிருந்த தமிழர் தரப்பு இதனை முற்றாக நிராகரித்து விட்டது. ஊடகங்களும் இந்த அம்சங்களைப் பற்றி எதனையும் வெளியிடவில்லை. பொது மக்களும் இவை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கவில்லை. சர்வதேச முயற்சியினால் ஏற்படுத்தப்பட்ட ஒஸ்லோ பிரகடனம் 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த புதிய அரசாங்கம் ( ஐக்கிய தேசிய முன்னணி) பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இலங்கையிலே போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு உடன்பட்டது.

பல ஆண்டுகளாக நடைபெற்ற சர்வதேச முயற்சியின் விளைவாக நோர்வேயின் அனுசரணையுடன் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்புகள் ஏற்பட்டன. அவற்றின் விளைவாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  அரசாங்கத்தின் சார்பில் ஒஸ்லோ பிரகடனத்தில் கையொப்பமிட்டார். சமஷ்டி அமைப்பு முறை மூலமாக இரு சாராரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இணங்கினர். அதன் விளைவாகப் போர் நிறுத்த உடன்படிக்கையும் போர் நிறுத்தத்தையும் கண்காணிப்பதற்கு வெளிநாட்டுக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன. ஆயினும், பேச்சுவார்த்தைகளில் இடைக்கால நிர்வாக அமைப்புத் தொடர்பாக முரண்பாடுகள் தோன்றின. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வட கிழக்கு மாகாணங்களில் பங்கு கொள்ளாதமையினால் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார். ஒஸ்லோ பிரகடனம் முடிவடைந்தது. அதன் பாரதூரமான விளைவுகள் யாவரும் அறிந்ததே கடந்த 30 ஆண்டு காலமாக  நடைபெற்ற போர் சடுதியாக முடிவுற்றதும் 1987 இல் உருவாகிய இந்திய  இலங்கை ஒப்பந்தம் மூலமாக ஏற்பட்ட மாகாண சபை அமைப்பு மட்டுமே எஞ்சியுள்ளது. இலங்கைத் தமிழர்கள் தங்கள் அரசியல் தீர்வை .தங்கள் சுயாட்சி உரிமையை ஐக்கிய இலங்கைக்குள் நிலைநாட்டவும் புதிய பேச்சுவார்ததைகளை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 2009 மே மாதம் 28 விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தின் பின்பு தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வுத் திட்டம் சம்பந்தமான போர் இன்று சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றமையை நாம் அவதானிக்கலாம். 2009 மே 18 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் வரைக்கும் தமது வயோதிபப் பருவத்தில் கூட தமிழ் மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்காமலும் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியிலும் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் துணிவுடன் நின்று தமிழ் மக்களின் உரிமைக்காக கருமமாற்றியவர் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா எனக் கூறலாம். முடிவடைந்த போரில் பெருந்தொகையான தமிழ் மக்களே பலியானதுடன் இடம்பெயர்ந்த மக்கள், அகதிகளான  மக்கள், காணாமற் போனோர் என இந்த நிர்க்கதிக்குள் ஆக்கப்பட்டன. 

இந்த நிலை இன்று வரைக்கும் முடிவில்லாத கதையாகத்தான் இருக்கின்றது ஜெனீவாப் பிரேரணை இந்த யுத்தத்தின் பின் அரசாங்கம் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தி சிங்கள மக்களும் சிங்கள அரசும் சந்தோஷமாக இருந்தபோது தான் சர்வதேச சமூகம் சம்பந்தப்பட்டு சர்வதேச  சட்டத்தை இலங்கை அரசாங்கம் மீறியதாகக் கூறி தமிழ் மக்களை மீள குடியேற்றுமாறு கூறிய போதும் கூட இலங்கை அரசாங்கம் அதனை பொருட்படுத்தாமல் அகதி மக்களை கம்பி வேலி போட்டு அடைத்து ஆடு, மாடுகளைப் போன்று வைத்திருந்தது. மேலும் இந்த நடவடிக்கை மூலமாக தமிழ் மக்களை  ஏமாற்றியும் துன்புறுத்தியும் வந்த நிலையில் தான் அமெரிக்க நாடு சம்பந்தப்பட்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக ஒரு பிரேரணையை அமெரிக்கா முன்வைத்தது. அந்தப் பிரேரணையில் இலங்கை தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட விடயத்தில் ஒருபடி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை, அதன் பரிந்துரைகளை தமிழ் மக்களுக்கு இனப் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்க விரும்பாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் தான் தப்பித்துக் கொள்ள அந்த ஆணைக்குழு அறிக்கையை சர்வதேசத்திடம் முன்வைத்தது. ஆனால் இலங்கை அரசாங்கம் ஜெனீவாப்  பிரேரணையில் தோல்வியடைந்த போது தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும்படி சர்வதேசம் ஐ.நா மனித உரிமைப் பேரவையும் அமெரிக்காவும் கூறிவரும் நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்று சர்வதேசத்தின் கைகளில் உள்ளது. இந்த காலகட்டம் தமிழ் மக்களின் இன அழிப்பு அதிகமாக நடந்ததென்ற வலி மக்களிடத்தில் அதிகரித்திருந்த போதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் முக்கியமானதொரு கட்டமாகும். எனவே தான் சர்வதேச மயமாக்கப்பட்ட இந்த நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு மிக முக்கியமாகப் பங்காற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் கோர வடுக்கள்  தமிழ் மக்கள் மனதில் இன்னும் அகலவில்லை. இதனால் சதா அழுத முகத்துடனும் கண்ணீருடனுமே பெரும்பான்மையான குடும்பங்கள் தங்களது வாழ்வை நடத்தி வருகின்றன. வட பகுதியை எடுத்துக் கொண்டால் யுத்தம் காரணமாக கணவனை  இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்கள் என ஒரு பகுதியினரும் அதேபோன்று பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், உற்றார், உறவினர்களை இழந்தவர்கள் என இன்னொரு பகுதியினரும் காணப்படுகின்றனர்.

இவற்றுக்கும் மத்தியில் காணாமற் போனோரின் பட்டியலும் மிக நீண்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜெனீவாவில் இரண்டு முறைகள் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.  அதில் சமத்துவம், கௌரவம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றோடு  கூடிய நிரந்தர சமாதானத்தை இலங்கை மக்கள் எட்டுவதற்கு உதவும் நோக்கையே இந்தப் பிரேரணை கொண்டுள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் எரின் சேம்பர் லெய்ன் டொனாட் தெரிவித்தார்.  இலங்கை  அரசின் நல்லிணக்கப்பாட்டுக்கான நடைமுறைப்படுத்தப்பட்ட போதிய நடவடிக்கை நிறைவேற்ற மேலதிக நடவடிக்கைகள் தேவை. இவ்விவகாரம் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இடம்பெறவில்லை. எனவே காலத்திற்கும் சமபாட்டுக்கும் பொருத்தமான இப்பிரேரணையை  ஐ.நா மனித உரிமைப் பேரவை பரிசீலனைக்கு உட்படுத்தி ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தனது கொள்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை ஊக்குவிக்கின்றது. நிரந்தரமான நல்லிணக்கப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதைத் தூண்டுகின்றது. இதற்கு மேலாக மனித உரிமைகள் தூதுவர் அலுவலகத்தோடு இணைந்து செயற்படுவதற்கும் ஆக்கபூர்வமன ஆலோசனைகளைப் பெறுவதற்கும் இப்பிரேரணை இலங்கையை வலியுறுத்துகின்றது. என்றார். அவர் இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக ஐ.நா வின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகஸ்ட் 25 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை இலங்கையில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். இவர் ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து முக்கிய பிரமுகர்களையும் போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களையும் சந்தித்து நேரடியாக உரையாடினார். அந்த வகையில் அரச தரப்பில் ஜனாதிபதியும் நீதி அமைச்சரையும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர், போரினால் பாதிக்கப்பட்ட, காணாமற் போனோரின் உறவினர்களையும் சந்தித்து உரையாடியிருந்தார். ஆனால் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்தவொரு முஸ்லிம் கட்சி உறுப்பினர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ ,அமைச்சர்களோ எவரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து முஸ்லிம் சமூகத்தின் நிலை பற்றி கதைக்கத் தவறியுள்ளமையானது இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லை என்பதனைத் தான் காட்டுகிறது. இந்த விடயம் முஸ்லிம் சமூகத்திற்கு பெரிதும் வெட்கக் கேடான விடயம் மட்டுமல்லாமல் இலங்கையில் எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும்  இருக்கும் போது பொதுபல சேனாவின் தீவிர  நடவடிக்கையால் 30 க்கும் மேற்பட்ட பள்ளிகள் உடைக்கப்பட்டும். அகற்றப்பட்டும் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற அமைச்சர்கள் வாய்மூடி மௌனியாக இருந்து கொண்டு எப்படி முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் உரிமைப் பெற்றுக் கொடுக்க போராடுகின்றார்கள்? இதனை முஸ்லிம் சமூகம் தீவிரமாக கவனத்திற் கொள்ள வேண்டும். 

ஆனால் முஸ்லிம்களும் இந்த நாட்டின் தேசிய இனம் தான் என்பதனையும் அவர்களுக்கும் இந்த நாட்டில் பிரச்சினைகள் உண்டு என்பதனையும் முஸ்லிம்களுக்கு வடக்கு, கிழக்குத் தாயக பூமி தான் என்பதனையும் தமிழ் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் முஸ்லிம்களின் பள்ளிவாசல் உடைப்புகள் பற்றியும் முஸ்லிம்களின் அரசியல் உரிமை பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சி இல்லாத சமயத்திலும் தமிழ்த் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளார்கள். இப்பொழுதும் கூட முஸ்லிம்களுக்கு அரசியற் கட்சி இருக்கும் இச்சந்தர்ப்பத்திலும் கூட பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் குரல் கொடுத்துள்ளார்கள். எனவே முஸ்லிம்களை தலைமை தாங்குபவர்கள் யார் ? மேலும் பொதுபலசேனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முறையாக நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று முஸ்லிம்கள் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகின்றார்கள். அதேவேளை ஆளும் தரப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வெறுப்படைந்தவர்களாகவும் முஸ்லிம் மக்கள் உள்ளார்கள். இவர்களை தங்களின் தலைவர்கள் என்றும் பிரதிநிதிகள் என்றும் கூறுவதற்கு வெட்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். மேலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வதேசம் கொடுத்துவரும் அழுத்தங்களின் விளைவாகவே அரசு தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இலங்கை இது உள்நாட்டு விவகாரம் என்று சொன்னாலும் இலங்கையின் கயாதிபத்தியம் இறைமை என்பன பற்றி உரத்துக் குரலெழுப்பினாலும் இன்று இலங்கையின் இனப் பிரச்சினை சர்வதேச விவகாரமாகிவிட்டது. உலக விவகாரங்களின் தாக்கம் இருப்பினும் தவிர்க்க முடியாதது. ஐ.நா.  மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் எந்தப் பரபரப்புகளுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும் மத்தியில் ஒருமாத காலம் நடந்து முடிந்திருக்கின்றது. இக்கூட்டத் தொடரில் இலங்கை பற்றிய விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்த்ததொன்றாக விளங்கியது. இலங்கை தமிழ், முஸ்லிம், பறங்கிய மக்களுக்கு எதிராக இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிறைவேற்றி வந்திருக்கின்றார்கள்.


அதன் காரணமாகவே இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தோன்றி வளர்ந்து எதிர்ப்புகள் போராட்டங்களாக இறுதியில் வளர்ந்தன ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மார்ச் 22 ஆம் திகதி 2012 இல் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக கொண்டு வந்த பிரேரணை 47 நாடுகள் வாக்களித்ததில் 24 நாடுகள் அமெரிக்காவுடன் சார்பாகவும் 15  நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் 8 நாடுகள் நடுநிலமை வகித்தது. இலங்கை அதில் தோல்வியடைந்தது. அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது. ஆயுதப் போர் எந்தவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட மாட்டாது. அது மேலும் புதிய பிரச்சினைகளை உண்டாக்கும். பலாத்காரம் பலாத்காரத்தையே வளர்க்கும். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுமையாக வாழ்வது அவசியமாகும். கடந்த காலத்தில் இவ்விரு இனங்களுக்கும் இடையே திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிகளுக்கு ஆளாகியதனால் பல துயரங்களை கண்டுள்ளோம். எந்த இனமும் மற்றொரு இனத்தினை பகைத்துக் கொண்டு வாழ முடியாது.  முஸ்லிம் அரசியல்வாதிகள் எந்தவொரு கொள்கையும் இல்லாமல் இவ்வாறு வேண்டிய  பக்கத்திற்கு ஏற்ப தாளம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள.தமது சமூகத்தின் பிரச்சினைகளின் உண்மைகளை அச்சமின்றி கூறுவதற்கு முன்வருதல் வேண்டும். கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து கொள்வதற்கு இரு சமூகங்களும் எங்கோ ஒரு புள்ளியில் சந்தித்தேயாக வேண்டும். இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக கேள்வி கேட்காத சமூகம் ஒருபோதும் தனது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளாது

Nessun commento:

Posta un commento

MB

Tamil Radios
Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk
 
ஜோதிடம்
 

Wikipedia search

Risultati di ricerca

இத்தாலியின் காலநிலை

 

 

.

.